இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் ஏறாவூர் அலிகாரை எதிர்கொள்ளப்போகும் கொழும்பு ஸாஹிரா
இலங்கையின் புகழ் பெற்ற முதல் 8 டிவிசன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஏறாவூர் அலிகார் கல்லூரியும், கொழும்பு ஸாஹிரா கல்லூரியும் பலப்பரீட்சை நடாத்தத் தகுதி பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான குறித்த தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் ஒரு குழுவில் 4 அணிகள் வீதம் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் முறையில் மற்றைய அணியுடன் தலா ஒரு போட்டியில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.
பின்னர் லீக் சுற்று முடிவில் குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகி பின்னர் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வகையில் இடம்பெற்ற போட்டிகளில் குழு ஏ இல் முதலிடம் பிடித்த ஏறாவூர் அலிகார் கல்லூரியும் சென் ஜோசப் கல்லூரியும் அரையிறுதிக்குத் தகுதி பெற, குழு பி இல் இருந்து கொழும்பு ஸாஹிரா கல்லூரியும், கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியும் தகுதி பெற்றன.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் குழு ஏ இல் முதலிடம் பெற்ற ஏறாவூர் அலிகார் கல்லூரியும், குழு பில் இரண்டாம் இடம்பெற்ற கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியும் பலப்பரீட்சை நடாத்தின.
விறுவிறுப்பிற்கு பஞ்சமின்றி இடம்பெற்ற ஆட்டத்தின் முதல் பாதியின் இறுதி நிமிடமான 44ஆவது நிமிடத்தில் வைத்து அலிகார் கல்லூரிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை அவ் அணியின் நட்சத்திர வீரரான முன்ஷிப் பொறுப்பேற்று இடக்காலால் கம்பம் நோக்கி அடிக்க பந்து மின்னல் வேகத்தில் கம்பத்தின் மேல் புறத்தில் ஊடாக உட்செல்ல முதல் பாதியை 1:0 என முடித்துக் கொண்டது அலிகார் கல்லூரி.
பின்னர் இடம்பெற்ற தீர்க்கமான 2ஆவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலுக்கான போராட்டத்தை அதிகப்படுத்தினர். இருப்பினும் இரு அணிகளினதும் பின்கள வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் மேலதீக கோல்கள் உட்செலுத்த முடியாமல் போக போட்டியில் 1:0 என வெற்றி பெற்ற ஏறாவூர் அலிகார் கல்லூரி அணி மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
தொடர்ந்து இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் குழு பி இல் முதலிடம் பிடித்த கொழும்பு ஸாஹிரா கல்லூரியும், குழு ஏ இல் 2ஆம் இடம் பிடித்த சென் ஜோஸப் கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடாத்தின. இப்போட்டியின் முதல் கோலினை சென் ஜோஸப் கல்லூரி உட்செலுத்தி ஆதிக்கம் செலுத்திய போதிலும் , ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் ஸாஹிரா கல்லூரி பதில் கோல் அடிக்க முழு நேர ஆட்டம் 1:1 என சமநிலை பெற்றது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி உதை வழங்கப்பட அதில் 4:2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி இறுதிப் போட்டிக்குள் மீண்டும் தடம் பதித்தது.
அதற்கமைய தீர்மாணமிக்க இறுதிப் போட்டி இன்று வியாழக்கிழமை (27) இரவு 8 மணிக்கு மின்னொளியில் கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், இவ் இறுதிப் போட்டியில் கடந்த வருடம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்திய அதே இரு பாடசாலை அணிக்கான ஏறாவூர் அலிகார் மற்றும் கொழும்பு ஸாஹிரா ஆகிய கல்லூரிகள் இம் முறையும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

