தியாகியின் மக்கள் நலப்பணி கிழக்கிங்கையில் மீண்டும் ஆரம்பம்.
வறிய குடும்பங்கள், மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டிச்சாரதிகள், விஷேட தேவையுடையோர் எனப்பலருக்கும் உதவிகள்
நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப்பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனினால் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலப்பணிகள் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸின் வேண்டுகோளுக்கிணங்க ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட மக்கள் நலப்பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு மீராவோடை பொதுச்சந்தை கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பொருளாதார ரீதியாக பின்னடைவை எதிர்நோக்கியுள்ள வறிய குடும்பங்கள் மற்றும் மனிதாபிமானமிக்க முச்சக்கர வண்டிச்சாரதிகள், விஷேட தேவையுடையோர்கள் எனப்பலருக்கும் உலருணவுப் பொதிகள், ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி திருமதி ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் செயலாளர் எச்.ஏ.அமீர், பிரதேச செயலகத்தின் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு தியாகி அறக்கொடை நிதியத்தில் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் இம்மனிதாபிமான உதவிகளை மக்களுக்கு கையளித்தனர்.
ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸின் வேண்டுகோளுக்கிணங்க கொடைவள்ளல் தியாகி ஐயாவின் சொந்த நிதியுதவியுடன் இப்பணிகள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்,
இன, மத வேறுபாடின்றி மக்களுக்கு நல்ல பணிகளை மேற்கொண்டு வருகின்ற வாமதேவன் தியாகேந்திரன் ஐயா போன்ற உயர் எண்னம் கொண்ட மனிதர்கள் பாராட்டப்பட வேண்டும்.
அவரின் மக்கள் நலப்பணிகளுக்கு தனது ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன்.
இப்பணிகளை நேர்மையாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஊடகவியலாளர் பாரிஸ் அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டார்.
மேலும், அங்கு உரையாற்றிய ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் மற்றும் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தியாகி ஐயாவின் இம்மகத்தான உதவிக்கு தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.




(எஸ்.எம்.எம்.முர்ஷித்)