மீட்கப்பட்ட காட்டு யானை கிராமத்திற்குள் புகுந்து தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி..!
பொலன்னறுவை மாதுருஓயா இசட்டி பிரதான கால்வாயில் தவறி விழுந்த காட்டு யானை (20) மீட்கப்பட்டதை அடுத்து திம்புலாகல வெஹெரகம கிராமத்திற்குள் புகுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை தாக்கி இருவரையும் கொன்றுள்ளதாக அரலகங்வில பொலிசார் தெரிவித்தனர்.
டி.ஆர். பொடி ராலஹாமி (74) மற்றும் அவரது சகோதரி டி.ஆர்.பிரேமாவதி மெனிகே ( 80 ) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அரலகங்வில பொலிசார் தெரிவித்தனர்.
டி.ஆர்.பிரேமாவதி மெனிகே முற்றத்தில் உயிரிழந்துள்ளதாகவும் டி.ஆர்.பொடி ராலாஹமி பொலன்னறுவை பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மாதுருஓயா 2 D பிரதான கால்வாயில் விழுந்த காட்டு யானையை வெஹெரகல வனவிலங்கு அதிகாரிகள் மீட்டெடுத்த பின்னர் குறித்த யானை வெஹெரகல கிராமத்திற்குள் சென்றுள்ளது .அங்கு கால்வாயில் நின்றிருந்த டி.ஆர்.பொடி ராலாஹமியை தாக்கி விட்டு வீட்டு முற்றத்தில் நின்றிருந்த அவரது சகோதரியான டி.ஆர்.பிரேமாவதி மெனிகே வையும் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)