உள்நாடு

சுஐப் எம். காசிம் எழுதிய “விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள்” நூல் வெளியீட்டு விழா புத்தளத்தில்

மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட “விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தின் வரலாறுகளைக் கொண்ட “விடத்தல்தீவு அலிகார் வரலாற்று கருவூலங்கள்” நூல் வெளியீட்டு விழா, தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளரும் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலைய கணித பாட கருத்திட்ட உறுப்பினருமான எம்.ஏ. வாஹித் தலைமையில், புத்தளம் – தில்லையடி ஆர்.ஜே. மண்டபத்தில், (22) சனிக்கிழமை இடம்பெற்றது.


அலிகார் மகா வித்தியாலய பழைய மாணவிகளினால் பாடசாலை கீதம் இசைக்கப்பட்ட இச்சிறப்பு நிகழ்வின் வரவேற்புரையை, முன்னாள் நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகமும் நூல் ஆக்கக் குழுவின் தலைவருமான ஏ.எம். அமீன் நிகழ்த்தினார்.


நிகழ்வில் அதிதியாக, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன், நூலையும் வெளியீட்டு வைத்தார்.
நூலாய்வினை, ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதியும், சிறந்த இலக்கியவாதியுமான ஏ.எல்.ஏ. அஸீஸ் நிகழ்த்தினார்.


நூலாசிரியர் பற்றிய விளக்கத்தை, வவுனியா பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவரும் விரிவுரையாளருமான பேராசிரியர் ஞானசீலன் வழங்கினார்.
“தினகரன்” பத்திரிகையின் முன்னாள் இணை செய்தி ஆசிரியரும், சிரேஷ்ட எழுத்தாளருமான சுஐப் எம். காசிம், வடக்கில் பிரபலமான பாடசாலையாகக் காணப்பட்ட அலிகார், பல்துறையாளர்களை உருவாக்கிய நிலையில் 90 களுக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்பும் விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயத்தின் பதிவுகளை மையமாகக் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளமை சிறப்பம்சமாகும்.


இச்சிறப்பு வெளியீட்டு விழா நிகழ்வில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த குமார், நூலாசிரியர் சுஐப் எம். காசிமுக்கு நினைவுச் சின்னம் வழங்கிப் பாராட்டி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதன்போது, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சட்டத்தரணி அமீர் பாயிஸ் உள்ளிட்ட மேலும் பலரும் உரையாற்றினர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *