ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது; ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான்
ஐக்கிய மக்கள் காங்கிரஸின் உத்தியோகபூர்வ காரியாலயம் அதன் செயலாளர் ஏ.சி.யஹியாக்கான் தலைமையில் நேற்று (23) சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்….
நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 15 வருடங்களாக இணைந்து பயணித்து வருகிறேன். மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் இந்த கட்சியை எமது சமூகத்தின் இருப்புக்காகவும், பிரதேச அபிவிருத்திக்காகவும் உருவாக்கினார். ஆனால் இப்போதுள்ளவர்கள் தமது கஜானாக்களை நிரப்புவதற்காக இதனை பாவித்து வருகின்றனர். நான் இக்கட்சியினால் பல்வேறு வெட்டுத் குத்துக்களையும், ஏமாற்றங்களையும் நேரடியாக சந்தித்தவனாக காணப்படுகின்றேன். முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் தராத, காணிகளை மீட்க திராணியற்ற, கல்முனை நகர அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து சிந்தித்து அங்கிருந்து வெளியேறினேன்.
எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு எந்த எண்ணமும் இவர்களுக்கில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று அரசியலை செய்து வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அமைச்சராக இருந்தும் கல்முனைக்கு எவ்வித அபிவிருத்திகளும் நடக்கவில்லை. கல்முனையை அபிவிருத்தி செய்ய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த எத்தனங்களை அவர்களே தடுத்தார்கள். இக் கட்சியில் வாய்மூடி மௌனியாக இருந்து சொல்வதற்கெல்லாம் ஆம் என தலையசைத்தாள் மாத்திரமே கட்சியில் உறுப்பினராக இருக்க முடியும். அதை மீறி செயற்பட்டால் கட்சி உறுப்புரிமை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.
மேலும் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் திருகோணமலை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலும் நாங்கள் களமிறங்க தயாராகி வருகிறோம் என்றார்.
இதன் போது பல்வேறு ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம்)