சம்மாந்துறை “திறனொளி” கலை கலாசார ஊடக வலையமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கலை இலக்கிய மாநாடும்..!
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை “திறனொளி” கலை கலாசார ஊடக வலையமைப்பின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கலை இலக்கிய மாநாடும், அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் நடைபெற்றது.
“திறனொளி” கலை கலாசார ஊடக வலையமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன “பிறை எப்.எம்.” அறிவிப்பாளருமான “சுவதம் – கலைச்சுடர்” ஏ.சீ. நவ்ஷாட் நெறிப்படுத்தலோடு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளர் கலாபூஷணம் யூனுஸ் கே. ரகுமான் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்பு நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம். ஹனிபா பங்கேற்றிருந்தார்.
விசேட அதிதிகளாக, அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான ரி.எம். ரின்சான், எம்.எம். ரஸ்மி மற்றும் மூத்த கல்விமான்கள் சிரேஷ்ட கலைஞர்கள் உட்பட “திறனொளி” கலை மன்றத்தின் உயர் பீட உறுப்பினர்கள் அங்கத்தவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின்போது, “திறனொளி” கலை மன்றத்துடன் இணைந்து கலைத்திறமையினை வெளிக்காட்டியவர்கள் கலைப் பணி செய்தவர்கள் பாராட்டப்பட்டதுடன், நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இதன்போது, “திறனொளி” கலை மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டு வரும் “திறனொளி” சஞ்சிகையின் “திறன்” பதினேழாவது இதழும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச பாடசாலை மாணவர்களுக்கிடையே “மீலாதுன் நபி” தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலை கலாசார போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், கலைஞர்கள், மாணவர்களது கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )





