இலங்கையின் சமூக, பொருளாதார,உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவும் குவைட்; கொழும்பு அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர்

இலங்கையின் சமூக, பொருளாதார உட்கட்டமைப்புக்கு மேம்பாட்டுக்கு பல்வேறு வழிகளிலும் குவைத் உதவி, ஒத்துழைப்புக்களை நல்கிவருவதாக கொழும்பு அல் ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எச். சேஹுத்தீன் மதனி தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டின் 64வது தேசிய தினமும் 34வது ஆண்டு விடுதலை தினமும் இன்று (24.2.2025) ஆகும். அதன் நிமித்தம் விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையில் நீண்டகால நட்புறவு நிலவுகிறது. இதன் பயனாக இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் குவைத் உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றது. குறிப்பாக ஆயிரக்கணக்கான இலங்கை தொழிலாளர்களுக்கு தமது நாட்டில் தொழில் வாய்ப்புக்களை வழங்கியுள்ள குவைத், இந்நாட்டில் பாலங்கள் நிர்மாணிப்பு உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கென பெருந்தொகை நிதியுதவிகளை வழங்கியுள்ளது. அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களிலும் இலங்கைக்கு குவைத் ஆதரவளித்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கை அரசாங்கம் சார்பிலும் மக்கள் சார்பிலும் இலங்கை ஹிக்மா நிறுவனம், குவைத்தின் தேசிய மற்றும் விடுதலை தினத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது.
மேலும் குவைத் அடைந்துள்ள முன்னேற்றம், பாரிய வளர்ச்சி, மறுமலர்ச்சி மற்றும் எண்ணற்ற சாதனைகள உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. குவைத்தின் இத்தகைய முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் மூல கர்த்தர்கள் அல்சபாஹ் பரம்பரையினராவர்.
ஈராக்கின் ஆக்கிரமிப்புக்கு இலக்காகி பல இன்னல்களை குவைத் அனுபவித்தாலும் மிகக் குறுகிய காலத்திற்குள் அந்நாட்டை அந்நாட்டு ஆட்சியாளர்களால் மீள கட்டியெழுப்ப முடிந்தது. ஆட்சியாளர்களின் மிகத் திறமையான செயற்பாடுகளும் சாணக்கியமும் மிக நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியா போன்ற நாடுகளின் மிகப்பெரிய ஒத்துழைப்புகளும் ஆக்கிரமிப்புகளில் இருந்து தங்களது நாட்டை குறுகிய காலத்திற்குள் மீட்டெடுத்து மீண்டும் குவைத்தை தலைநிமிர்ந்த நாடாக மாற்றியமைத்தனர்.

இச்சிறந்த தினத்தில் குவைத்தின் அமீர் மிஷ்அல் அல் சபாஹ், குவைத் இளவரசர் மற்றும் இலங்கைக்கான குவைத் தூதுவர், குவைத் மக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட ரீதியிலும் எமது நிறுவனம் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் பாராட்டுகின்றேன் என்றுள்ளார்.