வரவு-செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது; அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் நமது மக்கள் நலன் பெறும் சில திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய ரீதியில் இயங்கி வரும் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல்களில் பெருந்தொகையான மக்கள் NPP கட்சிக்கு வாக்குகளை வழங்கி உள்ளார்கள் நீங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக குரல் கொடுக்கும் சந்தர்ப்பத்தை இறைவன் எதிர்கட்சியினருக்கு வழங்கியுள்ளான் அதற்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
கடந்த காலங்களில் இன்றைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்கட்சியில் இருந்து செயற்பட்டதை போலவே நாங்களும் செயற்பட்டு வருகின்றோம் என்பதை ஆளும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி என்பதால் நாம் மக்கள் நலன்பெறும் திட்டங்களை எதிர்க்கமாட்டோம்.
மறைந்த பெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தென் கிழக்குப் பல்கலைக்கழகம் நமது நாட்டில் தேசிய பல்கலைக்கழகமாக இயங்கி வருகிறது. இப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு வருடமும் 2000 – 2500 மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பெரும் தொகையான சிங்கள மாணவர்கள் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதேவேளை கணிசமான முஸ்லிம், தமிழ் மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இன, மொழிகள் கடந்து தேசிய பல்கலைக்கழகமாக செயற்பட்டு வருகின்றது.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான, கலை கலாசார, அறபு கலாசார , தொழில்நுட்பம், முகாமைத்துவம், பொறியியல் ஆகிய பீடங்கள் இயங்கி வருகின்றன. தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடத்தினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான மருத்துவ பீடத்தையும், சட்ட பீடத்தையும் உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை கெளரவ பிரதம மந்திரி அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என எமது மக்கள் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
வட-கிழக்கு மாகாணங்களில் கடந்த 2024 ம் ஆண்டும், இந்த வருடமும் தொடர்ந்து வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதால் வட-கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு பாரிய நஸ்டம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்துள்ள கிழக்கு மாகாண விவசாயிகளின் மிஞ்சிய நெல்லை கூட உரிய விலைக்கு விற்க முடியாத நிலமை ஏற்பட்டன.
கிழக்கு மாகாண விவசாயிகளின் நெல் அறுவடை 70% நிறைவடைந்த நிலையில் குறைந்த விலையில் கிழக்கு மாகாண விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ததன் பின்புதான் அரசாங்கம் நெல்லின் உத்தரவாத விலையை அறிவித்தது. இதனால் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த நிலமையை மாற்றி எதிர் காலத்தில் உரிய காலத்தில் நெல்லின் உத்தரவாத விலைகளை அரசாங்கம் அறிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
உள்ளுராட்சித் தேர்தல் உரிய காலத்தில் நடைபெற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் போராடி வந்தனர். எதிர்கட்சியினர் எப்போதும் தேர்தல்களை சந்திக்க பயப்படவில்லை. எந்த ஒரு தேர்தலையும் சந்திக்க எதிர்கட்சி தயாரான நிலையில் உள்ளது என்பதனை ஆளும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நடாத்தும் காலம் தொடர்பான நியாயமான காரணங்களைத்தான் நாம் முன்வைத்தோம். அதற்காக தேர்தலுக்காக எதிர்கட்சியினர் பயந்துவிட்டோம் என்ற நிலமைக்கு ஆளும் கட்சி வரக்கூடாது.
பாராளுமன்றத்தில் 159 உறுப்பினர்கள் NPP க்கு கிடைத்துள்ளது. உங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆதரவுகளை பயன்படுத்தி மக்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பெறக் கூடிய திட்டத்தை செயற்படுத்த வேண்டும். கடந்த கால ஆட்சியினர்கள் மேற்கொண்ட தவறான செயற்பாடுகளின் தாக்கத்தில்தான் பெரும்பான்மையான மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏதோ விரைவில் உங்களின் ஆளும் அதிகாரத்தை பெறுவதற்கு முயற்சிப்பதாக நீங்கள் தவறாக நினைத்து செயற்பட வேண்டாம்.
எதிர்கட்சி உறுப்பினர்களின் சிறந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத நிலைமை தோன்றி வருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பித்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் உரை சிறப்பாக இருந்தது. இன ஐக்கியம் முதலில் பாராளுமன்றத்தில் இருந்து கட்டி எழுப்பப்பட வேண்டும். ஜனாதிபதி, பிரதம மந்திரி, சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், சபை முதல்வர் ஆகியோர் மக்களின் பிரதிநிதிகளின் கெளரவத்தினை பாதுகாக்கும் சம்பிரதாயத்தை பேண வேண்டும்.
பாராளுமன்றத்தில் 225 கதிரைகள் அதே இடத்தில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சி என்றும், எதிர்க் கட்சி என்றும் உறுப்பினர்கள் மாறி வருகின்ற யதார்த்தத்தினை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
(கே. எ. ஹமீட்)