உள்நாடு

ஆயிரம் பாடசாலைகளில் க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டம்.

அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka வேலைத்திட்டம்” பாடசாலை கட்டமைப்புக்கு எடுத்துச் செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டது.

எமது பாடசாலையை Clean செய்வோம்”நாட்டைக் கட்டியெழுப்பும் தலைமுறையின் முன்னோடியாக நாம் இருப்போம் ” என்ற கருப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம், குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பாடசாலை சமூகத்தின் தலைமையில் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக தேவையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப அறிவையும் முப்படைகளின் உறுப்பினர்கள் வழங்குகிறார்கள்.

அதன்படி, பாடசாலைகளில் உடைந்த மேசைகள், நாற்காலிகள், உபகரணங்கள், மின் கட்டமைப்புகள் மற்றும் நீர் குழாய் கட்டமைப்புகளின் அத்தியாவசிய பழுதுபார்ப்புகளும் செய்யப்படுவதோடு பாடசாலை தூய்மைப்படுத்தப்படும். இதன் முதல் கட்டமாக, இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் 100 பாடசாலைகளிலும், கடற்படையின் பங்களிப்புடன் 50 பாடசாலைகளிலும், விமானப்படையின் பங்களிப்புடன் 50 பாடசாலைகளிலும் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த மார்ச் மாத இறுதிக்குள் 1,000 பாடசாலைகளிலும் இத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் பாடசாலைகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது சிறப்பம்சமாகும்.மேலும் பாடசாலையை சுத்தமாக வைத்திருக்கும் அதே வேளை, தொடர்ந்து பராமரிக்க தேவையான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் (20) மே / கொ/மஹவத்த புனித அந்தோணியார் சிங்களக் கல்லூரியில் இலங்கை விமானப்படை வீரர்களின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டதோடு, இதற்கு இணையாக நாட்டின் ஏனைய 199 பாடசாலைகளில், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகளின் தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *