சவூதி ஸ்தாபகர் தினம் நாளை கொழும்பில்
சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினம் பெப்ரவரி 22.

“இமாம் முஹம்மது பின் ஸஊத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சவுதி அரேபிய இராச்சியத்தை ஸ்தாபித்த ஆண்டு நிறைவு நாள் பெப்ரவரி 22ஆம் திகதியாகும்”.
“மூன்று நூற்றாண்டுகள் கடந்துள்ள சூழலில் சவுதி அரேபியாவை உலக வல்லரசுகளோடு போட்டி போட்டு பல துறைகளிலும் முன்னேற்றமடைந்த நாடாக மாற்றியமைத்த பெருமை புனித இரு பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் பிரதமரும் பட்டத்து இளவரசருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகியோரைச் சாரும்”.

“மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பிரதமரும் பட்டத்து இளவரசருமான முஹம்மத் பின் சல்மான் மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோரின் பணிகளையும் சேவைகளையும் அல் ஹிக்மா நிறுவனம் பாராட்டுகிறது.”

இமாம் முஹம்மது பின் ஸஊத் (ரஹ்) அவர்கள் சவுதி அரேபிய இராச்சியத்தை ஸ்தாபித்த ஆண்டு நிறைவு நாள் பெப்ரவரி 22ஆம் திகதியாகும். இந்நாள் திருக்குர்ஆன், சுன்னா ஒளியில் நீதியையும் கருணையையும் கொண்டு ஆட்சி செய்யும் உன்னத அரசை ஸ்தாபித்த நாட்களில் சிறந்த நாளாக விளங்குகிறது. இது சகல மக்களும் மகிழ்ச்சியும் கண்ணியமும் பெருமையும் பெற்றுக்கொண்ட உன்னத வரலாற்று நாட்களில் ஒன்றாகும்.

கொழும்பில் இலங்கை – சவுதி இராஜதந்திர உறவின் ஐம்பதாண்டு நிறைவு
இமாம் முஹம்மது பின் ஸஊத் (ரஹ்) அவர்கள் திர்இய்யாவில் வாதி ஹனீபா எனும் இடத்தில் இருந்து தான் சவுதி அரேபியாவின் ஸ்தாபக நாளை ஆரம்பித்தார். அங்கிருந்து நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்றை ஸ்தீரப்படுத்தினார். நஜ்த் மாகாணத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஒன்றுபடுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார். அத்தோடு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் எவ்வித அச்சமுமின்றி தங்களது வியாபாரங்களை மேற்கொள்ள திர்இய்யாவை பாதுகாப்பான வியாபார கேந்திர மையமாகவும் வெளிமாவட்டங்களில் இருந்து புனித ஹஜ், உம்ரா கிரியைகளை நிறைவேற்ற வரும் யாத்திரிகர்களுக்கு பாதுகாப்பான பாதையாகவும் ஆக்கி வைத்தார்.
இமாம் முஹம்மது பின் ஸஊத் (ரஹ்) அவர்கள் நஜ்த் பிரதேசத்தில் திர்இய்யாவில் ஆரம்பித்த சவுதி அரேபிய ஸ்தாபக பயணத்தில் பல முக்கிய சாதனைகளை நிலைநாட்டினார். அதாவது திர்இய்யா பகுதியைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தினார். உள்ளூர் மக்களின் பாதுகாப்பை மாத்திரமல்லாமல் அயற்பிரதேசங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தினார். அதன் ஊடாக எவரது தலையீடுகளும் இன்றி தனித்துவமான அரசியலை ஸ்தீரப்படுத்தினார். ஆன்மீக சீர்திருத்தங்களையும் அவர் மேற்கொண்டார்.



அன்றைய அண்டை நாடுகளை சவுதி அரேபியாவுடன் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். தனது நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் முறியடித்த அவர், நாட்டின் பெருளாதாரத்தையும் ஒழுங்குபடுத்தினார். நஜ்த் பிராந்திய மாகாணங்களையும் ஒன்றுபடுத்தினார். குறிப்பாக வெளித் தாக்குதல்களில் இருந்து திர்இய்யாவைப் பாதுகாக்க முழு பகுதியிலும் பாதுகாப்பு சுவர் அமைத்தார். அத்தரபிய்யா எனும் இடத்தை தனது ஆட்சிக்குரிய தலைமையகமாக அமைத்தார். அதன் ஊடாக அனைத்து துறைகளிலும் தனித்துவம் மிக்க இராச்சியமாக உருவானது சவுதி அரேபியா.
அன்று தொடக்கம் சவுதி அரேபியாவை ஆட்சி செய்த தலைவர்கள் அனைவரும் மிகச் சிறந்தவர்களாகவும், அனைவராலும் போற்றப்படுகின்றவர்களாவும் விளங்குகின்ற போதிலும் இமாம் முஹம்மது பின் ஸஊத், மன்னர் அப்துல் அஸீஸ் (ரஹ்) ஆகியோர் சவுதி அரேபியா எனும் சிறந்த இஸ்லாமிய ஒரு நாட்டை உருவாக்கிட அளப்பரிய பங்களிப்புக்களை நல்கியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
பாரிய அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் ஊடாக இச்சிறப்பான தேசம் கட்டியெழுப்பப்பட்டது. என்றாலும் அதனை எதிர்கால சந்ததியினருக்கும் சிறந்த முன்மாதிரியுள்ள நாடாகவும், மனிதாபிமானத்தில் உலகத்தையே வென்ற நாடாகவும், உலக முஸ்லிம்களுக்கும், மத்திய கிழக்குக்கும் தலைமை தாங்கும் தேசமாகவும், பொருளாதாரம், நவீன ஆயுத பலம், படைப்பலம், பல நவீன கண்டுபிடிப்புகள் என அனைத்து விடயங்களிலும் உலக வல்லரசுகளோடு போட்டி போட்டு முன்னேற்றமடைந்த நாடாகவும் மாற்றியமைத்த பெருமை தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பிரதமரும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் ஆகியோரையே சாரும்.
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்தாபிக்கப்பட்ட சவுதி அரேபியா, கட்டம் கட்டமாக சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்து இன்று உலகில் மிகவும் வளர்ந்த நாடாக மாறியுள்ளதைக் காண முடிகிறது.
மேலும் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சவுதி அரேபியாவை விஞ்சும் அளவுக்கு வேறு நாடுகள் இல்லை. அந்தளவுக்கு பயங்கரவாதத்தைத் தங்களது நாட்டில் அடியோடு துடைத்தெரிந்த நாடாகவும் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நாடுகளில் பயங்கவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கும் தேசமாகவும் விளங்குகிறது சவுதி.
அதே போன்று ஊழல் ஒழிப்புக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடாக சவுதி அரேபியா விளங்குகிறது. தங்களது நாட்டில் உயர்ந்தவர், அரச குடும்பம் என்று கூட பாராமல் ஊழல் செய்தவர் யாராக இருந்தாலும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுக்கவும் செய்கிறது சவுதி. அத்தோடு ஊழல் செய்யப்பட்ட பல கோடி ரியாழ்களை பறிமுதல் செய்து அரசுடமையாக்கிய பெருமையும் அந்நாட்டுக்குள்ளது.
எந்த நாட்டில் ஊழல் உள்ளதோ அந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய நெருக்கடியைச் சந்திக்கும். அத்தோடு பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலையையும் அடையும். ஊழல் ஒழிப்பு விடயத்தில் மிகவும் கடுமையாக இருப்பதால் சவுதி பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளது எனலாம்.
மத்திய கிழக்கில் அரசியல் பலம் மிக்க நாடாக விளங்கும் சவுதி, உலகளவில் பாரிய அரசியல் பங்களிப்புகளைச் செய்யும் நாடாகவும் திகழ்கிறது. பல அற்புதமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் அளவுக்கு சவுதி முன்னேறியுள்ளது. இது உலகுக்கே ஆச்சரியமான விடயமாகும். சவால்கள் பல சவுதி அரேபியாவுக்கு இருந்தாலும் அனைத்து சவால்களையும் தடைகளையும் தாண்டி சவுதி முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இதற்கு இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் 2030 நோக்கு பாரிய பங்களிப்பு நல்குகிறது. நியோம், த லைன், நவீன திர்இய்யா, கித்திய்யா, முகஅப், அல் உலா, மன்னர் சல்மான் பார்க், முஹம்மத் பின் சல்மான் விளையாட்டரங்கம், ரியாத் விமானம், அதி நவீன ஆயுத உற்பத்திகள் போன்றன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றின் ஊடாக உலகையே மெச்சும் அளவுக்கு பாரிய முன்னேற்றங்களை சவுதி அரேபியா கண்டு விட்டது.
மன்னர் சல்மானின் “நமது நாடு அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமானதும் முன்னோடி மிக்கதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே எனது முதல் இலக்கு. அதை அடைய உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்ற கூற்றும், முஹம்மத் பின் சல்மானின் “ஒன்றாக, நாம் அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் நமது நாட்டைக் கட்டியெழுப்புவோம், வளமான, வலிமையான, அதன் ஆண் பெண் இருபாலாரின் முழுமையான ஒத்துழைப்புகளோடு அவர்களின் திறன்களிலிருந்தும் பயனடைவோம்” என்ற கூற்றும் சவுதி அரேபியாவை பாரிய முன்னேற்றத்தின் பக்கம் கொண்டு சென்று கொண்டிருக்கிறது எனலாம்.
இவ்வாறான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசகர் ஜாரெட் கான்ஷர், ‘இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், அவர் மத்திய கிழக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என நான் நம்புகிறேன், மேலும் உலகை சிறந்த இடமாக மாற்றிய பல விஷயங்கள் அவரால் செய்ய முடிந்துள்ளதாக நான் நம்புகிறேன்’ என்றுள்ளார்.
அதேநேரம் அமெரிக்காவின் வெளியுறவு இதழ், சவுதி அரேபியா அதன் உறுதியான பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் கீழ் அதிக இலட்சியங்களை அடைந்ததாக மாறியுள்ளது.
இவை இவ்வாறிருக்க, சவுதி அரேபியாவின் அனைத்துத் தலைவர்களும் பலஸ்தீன மக்களுக்கு நிரந்தத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க பலதரப்பட்ட முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த மக்களுக்குத் தேவையான அனைத்து விதமான மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறார்கள். அண்மையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் பலஸ்தீன மக்களை நாடு கடத்தி சவுதி அரேபியாவில் குடியமர்த்த வேண்டும் என்று தெரிவித்த கருத்தை இளவரசர் முஹம்மத் பின் சல்மான் உடனடியாக நிராகரித்தார். பலஸ்தீன மக்கள் நாடோடிகள் அல்லர். அவர்கள் அப்பூமியின் பூர்வீகக் குடிகள். அவர்கள் கடைசி வரை அங்கு தான் வாழ வேண்டும். அவர்களை பலஸ்தீனில் இருந்து வெளியேற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனக் கடுந்தொனியில் குறிப்பிட்டார். அத்தோடு பல நாடுகளின் உள்நாட்டு யுத்தங்களை நிறுத்தவும் சமாதானத்தை நிலைநாட்டவும் அளப்பரிய சேவைகளைச் செய்யவும் சவுதி தவறவில்லை.
2023 இல் சவுதி அரேபியா அரபு பொருளாதாரத்தில் முதன்மையானதாகும். பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைப் பொறுத்தவரை, இது ஜி 20 குழுவிற்கு அடுத்தபடியாக உள்ளது. உலகின் 10 சக்திவாய்ந்ததும் செல்வாக்குமிக்கதுமான பொருளாதார நாடுகளில் சவுதி உலகில் 9 வது இடத்தில் உள்ளது.
மேலும் ஆயுத மற்றும் படைப்பலத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் மத்திய கிழக்கில் ஆளில்லா விமானங்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க நாடாகவும் சவுதி மாறியுள்ளது. வருடமொன்றுக்கு 120 ஆளில்லா விமானங்களை சவுதி உற்பத்தி செய்கிறது.
சுற்றுலாத் துறையிலும் பாரிய முன்னேற்றமடைந்துள்ள சவுதிக்கு முழு உலக மக்களும் படையெடுக்கும் அளவுக்கு சுற்றுலாத்துறை வலுவடைந்துள்ளது. அத்தோடு சவுதி அரேபியா ஜி20 நாடுகள் அமைப்பிலும் பிரிக்ஸ் நாடுகள் அமைப்பிலும் மிக முக்கிய பங்களிப்பைச் செய்கிறது.
அல்லாஹ்வின் அருளாலும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் அயராத முயற்சிகளாலும் திறம்மிக்க சவுதி மக்களின் சக்தியாலும் உலகின் கவனத்தை சவுதி தன் பக்கம் ஈர்த்துக் கொண்டுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றிகளையும் மறுமலர்ச்சிகளையும் முன்னேற்றத்தையும் சவுதி அரேபியாவால் தொடர்ந்தும் அடைய முடிகிறது.
அதேநேரம் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான், தேசிய சர்வதேச அனைத்து விஷயங்களில் முன்னிலையில் இருப்பதோடு, நம்பிக்கைக்குரியவராகவும் அரபு இஸ்லாமிய தேசத்தின் நாயகனாகவும் சர்வதேசம் மதிக்கும் மிகப் பெரிய தலைவரகளில் ஒருவராகவும் விளங்குகிறார்.
இவ்வாறு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைந்த நாடாக விளங்கும் சவுதி, இலங்கையின் மிக நட்புக்குரிய தேசமாகவும் உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நட்புறவு ஆரம்பமாகி 50 ஆண்டுகள் இவ்வருடம் நிறைவடைகிறது.
அந்த வகையில் சவுதி அரேபியா, இலங்கைக்கு அன்று தொட்டு இன்று வரை பல பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கும் சமூக, பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கும் உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருகிறது. அவற்றில் கிண்ணியா பாலம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிநவீன நரம்பியல் சிகிச்சை பிரிவு, பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களும் கண்பார்வை குறைபாட்டு பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ முகாம்கள், வருடாவருடம் தொன் கணக்கில் பேரீச்சம் பழம் இலவசமாக வழங்கப்படல் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.
ஆகவே சவுதியின் ஸ்தாபக நாளான பெப்ரவரி 22 ஆம் திகதியை சவுதி மக்களும் பொதுவாக அரேபியர்களும் உலக மக்களும் போற்றுகின்ற இத்தருணத்தில் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி உட்பட சவுதி அரேபிய மக்கள் அனைவருக்கும் இலங்கை அல் ஹிக்மா நிறுவனமும் அதன் பணிப்பாளர் சபையும் இலங்கை மக்கள் சார்பாக பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

அஷ்ஷைக் எம்.எச் ஷைஹுத்தீன் பீ.ஏ. மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறிவனம்,
கொழும்பு