தமிழ் பேசும் சமூகங்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு மூத்த தமிழ் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளனர்.
“மெட்டுப் போடு” நூல் வெளியீட்டு விழாவில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவிப்பு
தமிழ் பேசும் சமூகங்களின் ஜனநாயக போராட்டங்களுக்கு மூத்த எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்பு வழங்கி வந்தனர் என கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் “மெட்டுப் போடு” நூல் வெளியீட்டு விழா பாலமுனை அமீர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்…
நமது பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் மூத்த எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் பாரிய பங்களிப்பு வழங்கி வந்தனர். நாம் எப்போதும் எமது சமூகத்திற்காக அர்ப்பணிப்போடு பங்களிப்பு வழங்கிய மூத்த எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் கெளரவிக்க வேண்டும். எமது மூத்த தமிழ் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் நமது மக்களின் உணர்வுகளை தற்கால மக்கள் மத்தியில் வெளிக் கொண்டு வர வேண்டும். நமது சமூகத்தின் பேராசிரியர்களும், கல்விமான்களும் நமது சமூகத்தின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பேராசிரியர்களான அனஸ், றமீஸ், அப்துல்லாஹ் ஆகியோர்களின் பங்களிப்பு குறித்து நமது சமூகம் ஆறுதல் அடைகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை மன்றக் கல்லூரியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் (பா.உ) அவர்களினால் உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் அனஸ் அவர்கள் கடந்த காலங்களில் நமது முஸ்லிம் சமூகம் இனவாதிகளினால் பாதிக்கப்பட்ட வரலாற்றினை நினைவுபடுத்தியதுடன், முஸ்லிம் சமூகம் தொடர்பாக பாராளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரும் பேச வேண்டும், நமது முஸ்லிம் சமூகம் தொடர்பான பதிவுகளை இட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அண்மைக் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தன. இவைகளை நமது முஸ்லிம் சமூகம் யதார்த்தபூர்வமாக இப்போதுதான் உணர்ந்துள்ளனர். நமது முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம். அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயாக்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் வாழும் எல்லா இன மக்களும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக கொண்டாட நாள் ஒன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பௌத்த மக்கள், இந்து மக்கள், கிறிஸ்தவ மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நாள் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான எந்த விடயங்களும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கப்படாத நிலமை உள்ளது எனத் தெரிவித்தார்.
(கே.எ. ஹமீட்)