இந்து சமுத்திர மாநாடு இன்று ஓமானில் ஆரம்பம்; வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரை
ஓமானின் மஸ்கற் நகரில் இன்று (16) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்திய பவுன்டேஷனுடன் இணைந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்கேற்புடன் வருடாந்தம் நடாத்தும் இந்து சமுத்திர மாநாடு இம்முறை ஓமானின் மஸ்கற் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகி, திங்கட்கிழமை (17) வரை நடைபெறவுள்ளது.
‘கடற்பிராந்திய ஒத்துழைப்பின் புதிய பரிமாணங்களை அடையாளங்காணல்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை நடைபெறவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டை ஓமான் வெளிவிவகார அமைச்சும், இந்திய வெளிவிவகார அமைச்சும் கூட்டிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
அதன்படி இலங்கை சார்பில் இம்மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மாநாட்டின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை விசேட உரையாற்றவுள்ளார்.
அதுமாத்திரமன்றி இதன்போது ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடாத்தவுள்ள அமைச்சர் விஜித ஹேரத் கடற்பிராந்தியப் பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள சுமார் 60 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.