நிந்தவூர் பிரதேசத்தில் தீடீர் சோதனை; 29 வயதுடைய பெண் மற்றும் 22 வயதுடைய ஆண் கைது!
ஒரு தொகை ஐஸ் போதைப் பொருள், இலத்திரனியல் தராசு, ரூபா 8,93,840/= பணத்துடன் பெண் ஒருவரும், ஒரு தொகை கேரளக் கஞ்சாவுடன் ஆண் ஒருவரும் கைது செய்துள்ளார்கள்.
கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸார் தலைமையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தீடீர் சோதனை நடவடிக்கை இன்று (15) சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இடம்பெற்றது.
இச்சோதனை நடவடிக்கையில் கல்முனை, சம்மாந்துறை, சவளலக்கடை, பெரியநீலாவனை, சாய்ந்தமருது, காரைதீவு போன்ற பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸார் மற்றும் காரைதீவு இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரினால் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை செய்பவரின் வீடுகள் சோதனை செய்யப்பட்டது.
திடீர் சுற்றி வளைப்பின் போது 29 வயது மதிக்கத்தக்க பெண், 22 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் வீட்டினை சோதனை செய்த வேளையில், ஒரு தொகை ஐஸ் போதைப் பொருள், போதைப் பொருட்களை நிறுக்க பயன்படும் இலத்திரனியல் தராசு ஒன்றும், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் ரூபா 8,93,840/= (எட்டு இலட்சத்தி தொண்ணுற்றி மூவாயிரத்து எண்ணுற்றி நாற்பது) பணமும் மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட ஆணின் வீட்டினை சோதனை செய்த வேளையில், ஒரு தொகை கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்