உள்நாடு

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோல்

அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள்  எதிர்நோக்கும் கல்வி, பொருளாதாரம், விவசாயம், மீன்பிடி, விளையாட்டு, சமூக சேவை மற்றும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் முன்மொழிவுகளைச் செய்து, இவ்வாறான பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வேண்டுகோள் விடுத்தார். 

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (11), அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரமவின் ஒருங்கினைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மேலும் பல கோரிக்கைகளை இங்கு முன் வைத்தார்.

நிந்தவூர் பிரதேச கலாசார மண்டப நிர்மாணம், வீதி அபிவிருத்தி, பாடாசாலை அபிவிருத்தி, பாலம் அமைத்தல் போன்றவையும், சாய்ந்தமருது பிரதேச மையவாடி, மீனவர்களின் பிரச்சினைகள், மாவடிப்பள்ளி பாடசாலை அபிவிருத்தி, விவசாயிகளின் பிரச்சனைகள், சம்மாந்துறை பேரூந்து தரிப்பிடத்தை மீண்டும் செயற்படுத்தல், அட்டாளைச்சேனை வீதிகள், வடிகான்கள் அமைத்தல், நாவிதன்வெளி மையவாடி, பொது விளையாட்டு மைதான புணர்நிர்மானம், போன்ற பல முன்மொழிவுகள் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில், கிழக்கு மாகாண ஆளுநர், அம்பாறை மாவட்ட பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள், ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(எம்.எப்.றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *