இலங்கை முழுவதும் இன்றும் , நாளையும் 90 நிமிட மின்வெட்டு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டவுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு (CEB) சொந்தமான பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களை மீண்டும் இயக்க மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகும் என இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி இயந்திரங்களின் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டு, அவை செயலிழந்து, அவற்றை மீண்டும் இயக்க பல நாட்கள் ஆகும் என்று பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்குக் காரணம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் கட்டப்பட்டபோது, இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் மின் பிறப்பாக்கி அமைப்பை குளிர்விக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் மின் தடை இருந்தபோதிலும், அந்த ஒரு சந்தர்ப்பத்தில் கூட குறிப்பிட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் உற்பத்தி இயந்திரம் ஒரு நாளைக்கு சுமார் 270 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்க முடியும் என்றும், அந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் அதிகபட்ச திறனில் இயக்கப்பட்டால், ஒரு நாளைக்கு 800 மெகாவாட்களுக்கு மேல் தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்க முடியும் என்றும் பொறியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த இயந்திரங்கள் மீண்டும் இயக்கப்படும் வரை மின்சார விநியோகத்தை பராமரிக்க அனல் மின்சாரம் தற்போது தேசிய மின்கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000669768-718x1024.jpg)