நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி,பிரதமர், அமைச்சர்கள்,எம்.பீ.க்கள் தம்மை அர்ப்பணித்து செயற்படுகின்றனர்; வட மத்திய ஆளுனர் வசந்த ஜினதாஸ
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் முன்வந்து செயற்பட்டு இந்த நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் எவ்வித இலாபமுமின்றி தமது சேவைகளை வழங்கி வருவதாக வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தெரிவித்தார்.
மக்காச்சோள உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் அனுராதபுரம் மாவட்ட பொதுச் சபை கூட்டம் வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஆளுநர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர் விவசாயிகள் தன்னார்வத்திட்டத்தில் பங்களிப்பதற்காக சமநிலை மட்டத்தில் இந்தக் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவியுள்ளோம் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்வதற்காக ஆண்டுதோறும் பெருமளவிலான நிதி செலவிடப்படுகிறது.அந்த பணத்தை நாட்டில் சேமிப்பதே எங்கள் நோக்கம்.வடமத்திய மாகாணத்தில் நிலம் மிகவும் வளமானது. மாகாணத்தில் வாழும் விவசாயிகள் மிகவும் துணிச்சலானவர்கள் அவர்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டி முறையான அறிவுறுத்தல்களுடனும் வழிநடத்தலுடனும் இப்பிரதேசத்தில் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது எமது நோக்கமாகும்.
அதிலிருந்து அதிக இலாபத்தை பெறலாம்.இந்த கூட்டுறவு அமைப்பை கட்டியெழுப்பும் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை அதிக ஆற்றலுடன் ஒன்றிணைந்து காட்டுவதேயாகும்.
அனுராதபுரம் மாவட்டத்தில் இவ்வருடம் சிறுபோகத்தின் போது நெற் பயிர்ச் செய்கைக்கு மேலதிக பயிராக 20.000 ஹெக்டேயர் சோளம் பயிரிடப்பட்டிருந்தது .தற்போது ஒரு ஏக்கருக்கு 2500 கிலோ மக்காச்சோளம் கிடைக்கின்றது.அதை ஏக்கருக்கு 3500 கிலோவாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த நோக்கில் 2026 ஆம் ஆண்டில் மக்காச்சோள உற்பத்தியை 550.000 மெட்ரிக் டொன்களாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)