தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு
தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் ஏற்பாடு செய்த இலங்கையின் 77வது சுதந்திர தின வைபவமும், தர்கா நகரில் உள்ள மூன்று பாடசாலைகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் (2024) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் விழாவும் பெப்ரவரி 4 ஆம் திகதி மேற்படி கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகர் கலாநிதி. நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
தர்கா நகர் ஜெம்மியத்துல் உலமா சபை செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.பர்ஹான் ஹனீபா (நளீமி) விசேட பேச்சாளராக களந்து கொண்டார்.நாட்டின் சுதந்திரத்துக்காக முஸ்லிம்கள் செய்த பங்களிப்பு குறித்தும் நாட்டுக்கு விசுவாசமான ஒரு சமூகமாக இருந்து முஸ்லிம்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் ஆற்றி வரும் சேவைகள் குறித்து ஞாபகமூட்டினார்.
கலாநிதி நஜீப் ஹாஜியார் உரையாற்றும் போது முஸ்லிம்கள் அன்று முதல் இன்று வரை நாட்டுப் பற்றுள்ளவராகவும் இருந்து வருகின்றனர்.நாட்டின் சுதந்திரத்துக்காக சிங்கள தமிழ் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்கள் தியாகத்துடன் பங்களிப்புச் செய்தனர் என்றார்.
ஸாஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் முஹம்மது ஸப்வான் உரையாற்றும் போது தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் சமூகத்தின் கல்வித்துறை முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் சேவைகள் மகத்தானது.கடந்த பல வருடங்களாக தேசிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவித்து பரிசில்களை வழங்கி வருவதை பாராட்ட வேண்டும் என்றார்.
தர்ஹா நகர் அமீர் ஆலிம் குர்ஆன் மதரஸா அதிபர் முஹம்மது அலி (முஸ்தபவி), நிலைய பனிப்பாளர் டாக்டர் குஸ்னா நஜீப் ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
தர்கா நகர் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை, அல்-ஹம்ரா மகா வித்தியாலயம், அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலைகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களே நிகழ்வில் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டவர்களாவர்.
மூன்று பாடசாலைகளினதும் அதிபர்கள், சித்தியடைந்த மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள், தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்கள், ஊர் பிரமுகர்கள், நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய பணிப்பாளர், சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000668257-1024x768.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000668256-1024x473.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/02/1000668258-1024x768.jpg)
(பேருவளை பீ.எம் முக்தார்)