உள்நாடு

மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே தற்போது பதவியில் உள்ளது.சஜித் பிரேமதாச

இன்று நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுகின்றது. மலிவு விலையில் தேங்காய் அரிசி மற்றும் உப்பு வாங்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முடியாத அரசு எவ்வாறு மக்களை வாழ வைக்கப்போகிறது என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைத் தருவதாக கூறினர், ஆனால் இன்று அவர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயியை சந்திப்பதற்கே பயப்படுகின்றனர். இவ்வாறான பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் விவசாயிகளை கைவிட்டுள்ளனர். இன்று அரச உத்தியோகத்தர்கள் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆதரவானவர்கள் மாத்திரம் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்நாட்டு மக்களை நிர்க்கதியாக்கும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக முன்நிற்பது மட்டுமன்றி பாரபட்சம் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாவோருக்கு நீதியை நிலைநாட்டும் வேலைத்திட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சுதத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் அவிசாவளையில் இன்று (09) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

பெரும்பான்மையான மக்கள் இன்று கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். நலமாக வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளன. உற்பத்தி, நுகர்வு, முதலீடு என்பன குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன. தங்கத்தை அடகு வைத்து விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தாலும் உரங்களுக்கு நிலையான விலை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் கடன் சுழற்சியில் மீண்டும் சிக்கியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் இருந்து கடன் வாங்குவது அதிகரித்து காணப்படுகின்றன. இவர்களின் வருமான மூலங்கள் சுருங்கிபோயுள்ளன.

அண்மையில் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்ற போதும் அவர்களுக்கு உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. சேவை செய்ய வேண்டும் என்றே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இந்த ஆட்சியாளர்களுக்கு பெற்றுத் தந்தனர். பழைய பாணியிலேயே இவர்களும் ஆட்சி நடத்தி வருகின்றனர். மக்கள் ஆணைக்கு இந்த அரசாங்கம் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும். காலம் தாழ்த்தல், இழுத்தடிப்பு தீர்வாகாது. மக்கள் உங்களிடமிருந்தும் இவற்றை எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைகள் எழும் போது சமாளிப்புக்கு பல விடங்களை முன்வைத்து வருகிறீர்கள். ஆனால் எடுத்த நடவடிக்கைகள் ஒன்றுமில்லை. அதிகாரம் உங்கள் கைவசமே காணப்படுகின்றது.

தனது எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் துன்பப்படும் மக்களுக்காகத் எப்போதும் திறந்தே இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மக்கள் மன்ற அலுவலகமாக மாற்றப்பட்டு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *