எழுத்தாளரும், முன்னாள் அதிபருமான இர்பான் காலமானார்
வெலிகாமம் தெனிப்பிட்டிய மதுராபுரவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபரும், பிரபல எழுத்தாளருமான எம்.எஸ்.எம் இர்பான் 5 ஆம் திகதி மொரட்டுவை எகொட உயன இல்லத்தில் காலமானார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான இவருக்கு வயது 63 ஆகும்.
பேருவளை தொகுதியில் உள்ள மக்கொனை அல்-ஹஸனியா முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிகம தெனிபிட்டிய மதுராபுர அல் ஸபா மகா வித்தியாலயம், கொழும்பு, மட்டக்குளி சேர் ராஸிக் பரீட் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும், நாட்டின் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் இவர் கடமையாற்றினார்.
அண்மைக் காலத்தில் நோயுற்ற இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 ஆம் திகதி காலை காலமானார்.
வெலிகமவைச் சேர்ந்த மர்ஹும் அதிபர் ஸஹீத் தம்பதிகளின் புதல்வரான இவர் மேற்படி பாடசாலைகளில் அதிபர் பதவி வகித்த போது அப் பாடசாலைகளை கட்டியெழுப்புவதில் தியாகத்துடன் உழைத்தார்.
தர்கா நகர் மீரிப்பனையைச் சேர்ந்த ஆசிரியை சீனல்துல் முனவ்வராவின் கணவரான இவர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் எம்.இஸட் அஹம்மத் முனவ்வரின் சகலவருமாவார்.
ஜனாஸா 5 ஆம் திகதி மாலை மொரட்டுவ எகொட உயன ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா நல்லடக்கத்தில் உலமாக்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)