உலகம்

முஹம்மத் நபியின் ஹிஜ்ரத் பாதையை மீண்டும் உயிர்ப்பிக்கும் சவூதி அரேபியா

சவூதியின் மதீனா நகரில் “நபியின் பாதையில் (In the Prophet’s Steps)” என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், மதீனா பிராந்திய தலைவர் இளவரசர் சல்மான் பின் சுல்தானினால் அதிகாரப்பூர்வமாக அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது.

மக்காவில் இருந்து மதீனாவிற்கு முஹம்மது நபி அவர்களின் இடம்பெயர்வின் (ஹிஜ்ராவின்) சுவடுகளை பாதுகாப்பதனை நோக்காக கொண்ட இந்த புது முயற்சி, திங்கட்கிழமை உஹூத் மலைக்கு அருகில் நடைபெற்ற தொடக்க விழாவில் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது.

மக்கா பிராந்திய துணை தலைவர் இளவரசர் சவூத் பின் மிஷால் உட்பட முக்கிய அறிஞர்கள் மற்றும் உயர்தர அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த முக்கிய திட்டம், முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிஜ்ரா பயணத்தின் 470 கிலோ மீற்றர் பாதையை மீண்டும் உருவாக்குவதை நோக்காக கொண்டதாகும்.

இதில், 41 முக்கிய தலங்கள் சீரமைக்கப்பட இருப்பதோடு இந்த ஹிஜ்ரா பயணத்தின் முக்கிய தருணங்களை விவரிக்கும் வகையில் ஐந்து கண்காட்சி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

முக்கிய அம்சமாக, இந்த வரலாற்றின் முக்கியமான அத்தியாயத்தை விளக்கும் சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்திய கண்காட்சிகள் மூலம் அங்கு வரும் பயணிகளுக்கு ஹிஜ்ரா தொடர்பான ஒரு முழுமையான அனுபவத்தை வழங்க ஹிஜ்ரா அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது.

அங்குரார்பன நிகழ்ச்சியில் உரையாற்றிய இளவரசர் சல்மான், இஸ்லாமிய மரபை பாதுகாக்கவும் இரண்டு புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனாவை தரிசிக்க வரும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் சவூதி அரேபியாவின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த திட்டம், இரண்டு புனித ஸ்தளங்களுக்கு சேவை செய்யும் மற்றும் யாத்திரிகர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சிறந்த ஆன்மீக மற்றும் கலாச்சார அனுபவத்தையும் வழங்கும் நோக்கிலான சவூதியின் விரிவான முயற்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை அறியப்படுத்துவதன் மூலமாக இஸ்லாமிய வரலாற்றைப் பாதுகாப்பதில் சவூதி அரேபிய தலைமைத்துவத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது எனவும் இளவரசர் சல்மான் கூறினார்.

மேலும், இந்த முயற்சி, உலகம் முழுவதிலிருந்தும் வரும் பார்வையாளர்களுக்கு ஆன்மிக ஆழத்தையும் சவூதி அரேபியாவின் கலாச்சார பண்பாட்டு செழுமையையும் இணைத்து, வித்தியாசமான ஒரு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவூதியின் பொது பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்க்கி அல்ஷேக், இந்த திட்டத்தின் பின்நிலையில் உள்ள கூட்டு முயற்சியையும், இந்த முயற்சியில் தனித்துவத்தையும் துள்ளியத்தையும் உறுதி செய்ய பங்களித்த வரலாற்று மற்றும் அரசாங்க அமைப்புகள் பலதினை பாராட்டினார்.

இந்த திட்டமானது நவம்பர் மாதத்தில் பொதுமக்களுக்காக அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்படும் என்றும், இது ஆறு மாதங்களுக்கு தொடர்தேர்ச்சியாக நடைபெற்று, பார்வையாளர்களுக்கு நபியவர்களின் பயணத்தை பின்தொடரும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் என்றும் கூறினார்.

சவூதி அரேபியா தனது இஸ்லாமிய மற்றும் பண்பாட்டு மரபுகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தொடர்ச்சியாக முக்கியமான முயற்சிகளை எடுத்து வருவது நன்கறிந்ததே, அதில் இதுவும் ஒரு முக்கிய முயற்சியாகும். முக்கியமான வரலாற்றுத் தொன்மைவாய்ந்த சொத்துகளைப் புனரமைத்து, உலகளாவிய ஆன்மிக சுற்றுலா மையமாக தன்னை நிலைநிறுத்துவதற்கு சவூதி முயல்கிறது.

இதன் மூலம் அதன் ஆழமான வரலாற்று பாரம்பரியமும், உலகளவில் முஸ்லிம்களுக்காக சேவை செய்யும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், செழித்த வரலாற்றையும் எதிர்கால முன்னேற்றத்தையும் ஒருமைப்பாடு செய்யும் சவூதி அரேபிய அரசின் முயற்சிகளுக்கான இன்னொரு சாட்சியமாகும்.

(காலித் ரிஸ்வான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *