உள்நாடு

தனியார் துறையிலும் அரச சேவையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது மக்கள் எதிர்பார்க்கும் சேவைகள் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது சொல்வதைச் செய்யாத போக்கே காணப்படுகிறது. மக்களுக்கு நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கம்பஹா இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, “அரசாங்கத்தின் பேச்சுக்கள் நன்றாக இருந்தாலும் செயல் பலவீனமாகவும் மெத்தன போக்கிலும் காணப்படுகின்றன. மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் இந்த அரசிடம் இல்லை.

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் போது மாற்று வாழ்வாதார ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான புதிய ஏற்பாடுகள் இந்த அரசிடம் இல்லை. பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அரிசி, தேங்காய்க்கும் கூட தட்டுப்பாடு உள்ளது.

இறக்குமதி பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. மின்சார கட்டணம் 33% குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மின்சார சபைக்கு அதிக இலாபம் கிடைத்தாலும் மக்களுக்கு அந்த இலாபம் கிடைத்தபாடில்லை. பொதுமக்களின் விமர்சனங்களுக்கு மத்தியிலேயே 20% மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது.

இன்று கூட்டுறவு சங்கத் தேர்தல்களின் மூலம் மக்களின் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்துக்கு சுமையாக மாறியுள்ளது. உர மானியத்தை கூட முறையாக வழங்க முடியாத அரசு, பரிசோதனைகள் இன்றி 328 கொள்கலன்களை சிவப்பு அறிவிப்புடன் விடுவித்துள்ளது.

அரச உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்து இருக்கின்றனர். தனியார் துறையிலும் அரச சேவையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக மக்களுக்காக என்றும் குரல் எழுப்புவோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *