ஓட்டமாவடி பிரதேசத்தை துவம்சம் செய்யும் காட்டு யானைக்கூட்டம்
ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதுடன், அப்பிரதேசத்தை நாளுக்கு நாள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஓட்டமாவடி ஆற்றின் நடுப்பகுதி மற்றும் காவத்தமுனை வயற்பிரதேசத்தில் மாதக்கணக்கில் குடிகொண்டுள்ள யானைக்கூட்டம் இரவு, பகல் பாராது மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் ஊடுறுவி உடமைகளுக்குச்சேதம் விளைவிப்பதுடன், பெறுமதியான காய்க்கும் தென்னை, மா, பலா போன்ற நெடுநாள் பயந்தரும் மரங்களையும் துவம்சம் செய்து வருவதுடன் உயிர் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றது.
மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தினூடாகவும் பிரதான வீதியைக்கடந்தும் ஊடுறுவும் காட்டு யானைக்கூட்டத்தின் அச்சுறுத்தல் தாக்குதலிலிருந்து மக்களைக்காக்கும் பணியினனை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்கள், பிரதேச சபை, வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை அமைப்பினர், அகீல் எமேர்ஜென்ஸி, அப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்னெடுத்த போதும் தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலவியே வருகின்றது.
இதன் காரணமாக இப்பிரதேச மக்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து நிம்மதியற்று வாழ்வதுடன், பகல் வேளைகளில் அச்சத்துடன் இப்பிரதேசங்களில் நடமாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
இது விடயத்தில் மேற்குறித்த அரச திணைக்களங்கள், அமைப்புக்கள் தங்களால் முடிந்த அத்த்னை பணிகளை முன்னெடுத்த போதும் நிரந்தரத்தீர்வு எட்ட முடியாத நிலை காணப்படுகின்றது.
இப்பிரதேச திணைக்களங்கள், இப்பணியில் ஈடுபடும் பொது அமைப்புக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து நிரந்தரத் தீர்வினைக் காண்பதற்கான விரிவான கலந்துரையாடலுக்கு வர வேண்டுமென இப்பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இல்லாவிட்டால், யானைக்கூட்டத்தின் அச்சுறுத்தல் காரணமாக இப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக நிம்மதி இழந்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்வதுடன், பெறுமதியான உடமைகள், விவசாய நடவடிக்கைகள் இழக்க வேண்டி வருவதுடன், பெறுமதியான உயிர் இழப்புக்களையும் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் குறித்த கிராமங்கள் முற்றாக யானைக்கூட்டத்தினால் அழிவுக்குள்ளாக்கப்படும் நிலையும் உருவாகும்.
இவைகளைக்கருத்திற்கொண்டு நிரந்தரத்தீர்வினை பெற்றுத்தர மேற்குறித்த திணைக்களங்கள், அமைப்புக்கள் குறிப்பாக, வனஜீவராசிகள் திணைக்களம் என்பன முன்வர வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் வினயமான வேண்டுகோளாகும்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)