இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 1000 ஆவது குத்பா நேரடி அஞ்சல் இன்று
சுனாமி அனர்த்தத்தினைத் தொடர்ந்து இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குத்பா நேரடி அஞ்சல் ஆயிரத்தை எட்டியுள்ளது.
இன்று 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளியிலிருந்து ஆயிரமாவது குத்பா உரை நேரடியாக இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நேரடி அஞ்சல் செய்யப்படவுள்ளது. இன்றைய தினம் குத்பா பிரசங்கத்தை அகில இலங்கை ஜெம்மியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி நிகழ்த்தவுள்ளார்.
2004 ஆம் ஆண்டு ஆரம்பமான முதலாவது குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தியே நிகழ்த்தியிருந்து குறிப்பிடத்தக்கது. இந் நேரடி அஞ்சலை வானொலி முஸ்லிம் சேவையின் அப்போதைய கட்டுப்பாட்டாளராகவும்,பின்னால் பணிப்பாளராகவும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்த எம.இஸட்.அஹமத் முனவ்வர் ஆரம்பித்து வைத்திருந்தார்.
ஒவ்வொரு வெள்ளியும் பகல் 1.05 க்கு ஆரம்பமாகும் இந் நேரடி அஞ்சலை அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம் சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளர் முஹம்மத் றீஸா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நேரடி அஞ்சல் சிறப்பாக இடம்பெறுவதற்கு கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளியின் முன்னாள்,இன்னாள் நிர்வாக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு வழங்கினார்கள்.