உள்நாடு

ரோஹிங்கியா அகதிகளை வெளியேற்றும் தீர்மானமில்லை. பிரதியமைச்சர் அருண.

மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் இலங்கையில் குடிவரவு சட்டத்துக்கு முரணாகவே நாட்டுக்குள் வருகைத் தந்துள்ளார்கள். இவர்களின் விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் செயற்படுகிறது. இருப்பினும் நாட்டின் சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டிய அவசியமும் காணப்படுகிறது. இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற முத்திரையை குத்த ஒருதரப்பினர் முயற்சிப்பது கவலைக்குரியது என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்  முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

166 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வந்தார்கள்.கடற்படையினர் இவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை 167  ஆக அதிகரித்துள்ளது. நாட்டின்  குடிவரவு சட்டத்துக்கு முரணாகவே இவர்கள் வந்துள்ளனர் எனவே இவ்விடயத்தில் தேசிய கொள்கை ஒன்றை அமுல் படுத்த வேண்டும்.

அத்துடன் மறுபுறம் மனித  உரிமைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். 1959 ஆம் ஆண்டு சமவாயத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அந்த சமவாயத்தில் அகதிகளை  அங்கீகரிக்கவும் அவர்கள் தொடர்பில் நெருக்கமாக செயற்படுவதற்கும்  குறிப்பிடப்பட்டுள்ளது. சமவாயத்தில் கைச்சாத்திடாவிடினும் மனிதாபிமான அடிப்படையில் செயற்பட்டுள்ளோம். செயற்படுகிறோம்.

மியன்மார் ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக படகுகளில்  நாட்டுக்குள்  வந்துள்ளனர். இவர்கள்  இலங்கையின் குடிவரவு சட்டத்தை மீறியுள்ளார்கள். ஆகவே நாட்டின் சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். தனிமைப்படுத்தல் சட்டம்,குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்களை கருத்தில் கொண்டே இவர்கள் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில், அரசாங்கத்தில் இருந்த  அமைச்சரே இன்று இவர்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்துள்ளார்.   மியன்மார் நாட்டு ரோஹியன்கா மக்கள் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே வலியுறுத்தியுள்ளோம்.

அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் இந்த அரசாங்கம்  முஸ்லிம்களுக்கு விரோதமானது என்ற முத்திரையை குத்த முயற்சிக்கின்றனர். சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு வந்தவர்களை இன ரீதியில் பார்க்கவில்லை மனிதாபிமான ரீதியில் பார்த்தே அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

நாங்கள் நேரடியாகவே அவர்களை பார்ப்பதற்கு சென்றோம். அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். எமது நாட்டு மக்களும் கடந்த காலங்களில் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். ஆகவே அந்த வேதனையை நாங்கள் நன்கு அறிவோம்.

ஆகவே இவ்விடயத்தில் இனவாத ரீதியிலான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது கவலைக்குரியது. இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வந்துள்ளனர். ஆகவே இவ்விடயத்திற்குரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எந்தவித தீர்மானங்களும்  இதுவரை எடுக்கப்படவில்லை. நாட்டில் தங்க வைப்பது, நாட்டை விட்டு வெளியேற்றுவது அல்லது வேறு ஒரு நாட்டுக்கு அனுப்பிவைப்பது என்ற யோசனைகள் மட்டுமே முனவைக்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *