பொதுத்தேர்லில் 12 இலட்சம் தமிழ் முஸ்லிம் வாக்குகளைப் பெற்ற ஆளும் கட்சியானது தமிழ், முஸ்லிம் சமூகங்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாகும்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 12 இலட்சம் தமிழ்,முஸ்லிம் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஆளும் கட்சிக்கு பெரும் தொகையான தமிழ்,முஸ்லிம் மக்கள் வாக்களித்தமைக்கு பிரதான காரணம் உள்ளது. முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தபாய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது ஊமைகளாக செயற்பட்டனர். இவ்வேளையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரமதாச, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் றஊப் ஹக்கீம் அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் றிசாத் பதியுத்தீன் ஆகியோர்கள் முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்ட விடயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். அன்று எதிர் கட்சியிலிருந்த அனைவரும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தனர் என பாராளுமன்றத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” கருத்திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு மௌனமாக இருந்த அனைவரும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். பாராளுமன்றத்தில் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்டு க்ளீன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
க்ளீன் ஶ்ரீலங்கா திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் 18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நமது நாட்டின் சுதந்திரத்திற்காக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாத நிலையை மாற்றியமைத்து தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அண்மையில் நடைபெற்ற உயர் நீதியரசர்கள் நியமனத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு பாரபட்சம் ஏற்பட்டுள்ளது குறித்து முஸ்லிம் சமூகம் கவலை அடைந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிரேஸ்ட நீதியரசர் லாபார் புறக்கணிக்கப்பட்டுள்ளார். நீதித் துறை நியாயமாக செயற்பட வேண்டும். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இதுவரையும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத நிலை தொடர்கிறது. ஆளும் கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்கள் எங்களிடம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். முஸ்லிம் ஒருவரை அமைச்சரவையில் நியமிக்குமாறு எமது முஸ்லிம் சமூகம் கோரிக்கை விடுப்பதனை ஆளும் கட்சியினர் வேறு விதமாக விமர்சனம் செய்ய வேண்டாம். முஸ்லிம் ஒருவரை அமைச்சரவையில் நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்த போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் தகுதி உள்ளவர்கள் இல்லையென ஆளும் கட்சியினர் கூறியதாக கேள்விப்பட்டோம். அமைச்சரவையில் பிரதி சபாநாயகர் DR றிஸ்வி சாலியை நியமியுங்கள் அல்லது பிரதி அமைச்சர் ஒருவரை நியமியுங்கள் என்று எமது சமூகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் பெயர்ப் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கிம் கோரிக்கை விடுத்த போதும் இதுவரையும் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் பெயர்ப்பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏன் ஆளும் கட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர் என்பது புரியாமல் உள்ளது. எனவே கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்களின் விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
க்ளீன் ஶ்ரீலங்கா திட்டம் பற்றி பேசும் நாம் எமது உள்ளங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். உள்ளத்தில் வேறு ஒன்றை நினைத்துக்கொண்டு செயற்பட முடியாது. இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் சுதந்திரத்திற்கும், ஐக்கியத்திற்கும் பாரிய பங்களிப்புகளை வழங்கியதுடன், தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என்ற உண்மையினை இச்சபையில் வெளிப்படையாகவே தெரிவித்துக்கொள்கின்றேன்.
சவூதி அரசாங்கத்தினால் அம்பாறை மாவட்டத்தில்(நுரைச்சோலை) 1000கோடி
ரூபா நிதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. 20 வருடங்களாக சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கறைப்பற்று பிரதேச மக்கள் வீடுகளின்றி சிரமப்படுகின்றனர். அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களை சந்தித்த சவூதி அரேபியா நாட்டின் தூதுவர் இவ்வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடமும் சவூதி தூதுவர் வீடுகளை மக்களிடம் கையளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே அக்கறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வாழும் சனத் தொகைக்கு ஏற்ப இவ்வீடுகளை மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்