கிளீன் ஸ்ரீலங்கா கருத்திட்டத் தெளிவூட்டல் மற்றும் சிரமதான வேலைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
“செழுமையான தேசம் அழகான வாழ்வு” என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் கிளீன் ஸ்ரீலங்கா செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச சபையினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள பாரிய சிரமதான வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலும் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கல ராமநாயக்கவின் ஏற்பாட்டில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் நிமல் பத்திரண தலைமையில் கற்பிட்டி பிரதேச உதவி செயலாளர் சந்தியா பிரியதர்ஷினியின் பங்குபற்றுதலுடன் கற்பிட்டி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது,
இந்நிகழ்வில் இரு சிரமதான வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி எதிர்வரும் 2025 /01/28 ம் திகதி செவ்வாய்க்கிழமை பாலாவி தொடக்கம் கற்பிட்டி வரையிலான பிரதான வீதியின் இரண்டு பக்கங்களையும் சிரமதானம் மூலம் துப்புரவு செய்தல் இதற்காக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், சங்கங்கள் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்வது எனவும் இதன் ஊடாக இரு குழுக்கள் பிரிக்கப்பட்டு நுரைச்சோலையிலிருந்து பாலாவி வரை வீதியோர சிரமதான பணியை மேற்கொள்வதற்கு ஒரு குழுவும் மற்றைய குழு நுரைச்சோலையிலிருந்து கற்பிட்டி வரை வீதியோர சிரமதான பணிகளை மேற் கொள்வதற்கும் சகலரின் ஆலோசனைகளுக்கும் அமைய தீர்மானிக்கப்பட்டது .
இரண்டாவது கட்டமாக எதிர் வரும் 2025 /02/02 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டக்குழி கடற்கரை, கண்டக்குழி குடா மற்றும் ஆலங்குடா, இலந்தையடி கடற்கரை என சுற்றுலா பயணிகள் செல்லும் கடற்கரைப் பகுதிகளை சிரமதான வேலைத்திட்டம் ஊடாக துப்பரவு செய்தல் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
மேற்படி இரு சிரமதான வேலைத்திட்டங்களிலும் நலன் விரும்பிகள் சகலரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் சிரமதான வேலைத்திட்டம் மேற்கொள்ளும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதோடு அவ்விடங்களை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)