கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைக்கு மாற வேண்டாம்; மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்
“க்ளீன் ஸ்ரீலங்கா” செயற்திட்டம் தொடர்பில், ஜனாதிபதியினதும் ஆளும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களின் கருத்துக்களை, கடந்த இரு தினங்களாக இந்த பாராளுமன்றத்தில் கேட்டுவருகின்றோம். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சானது, தனிப்பட்டவர்களை வஞ்சம் தீர்க்கும் வகையிலும் பழிதீர்க்கும் எண்ணத்துடனும் பொருத்தமில்லாத பேச்சுக்களாக இருப்பதை காணமுடிந்தது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
க்ளீன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில், புதன்கிழமை (22) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“உண்மையில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ சுத்தமாக்கப்படல் வேண்டும் என்பதை நாம் வரவேற்கும் அதேவேளை, அது அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் இருக்கின்ற 225 பேரும், நாங்கள் எங்களது நிலைப்பாட்டை, எண்ணங்களை முதலில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்கின்ற போதுதான், நாடும் நாட்டினுடைய எதிர்காலமும் சிறப்பானதாக அமையும்.
எனவே, அந்த வகையில், இந்த வேலைத்திட்டம் தொடர்பில், மக்கள் இன்னும் புரிந்துணர்வுடன் இல்லை. எனவே, அரசாங்கத்திற்கு ஒரு தார்மீக பொறுப்பு இருக்கின்றது. இதனை சரியாக மக்களுக்கும் குறிப்பாக, இங்கு இருக்கின்ற எமக்கும் இது பற்றிய தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை. இங்கு பேசிய பேச்சுக்களில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை தெளிவுபடுத்துவதை விட, ஒருவரை ஒருவர் திட்டுகின்ற, பழிதீர்க்கின்ற மற்றும் கடந்த காலங்களில் நடைபெற்ற விடயங்களை பேசுகின்ற வகையிலேயே, நேரங்கள் வீணடிக்கப்பட்டதையே பார்க்க முடிந்தது.
கடந்த காலங்களில், இருந்த பாராளுமன்றமும், அரசாங்கமும் சரியில்லை என்பதினால்தான், உங்களைப் போன்றவர்களை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, ஜனாதிபதியாக தெரிவு செய்ய அதிகப்படியான ஆதரவை மக்கள் வழங்கினார்கள். நீங்களும் கடந்த காலங்களில், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் செயற்பட்டதை போலல்லாது, மன திருப்தியோடு மக்கள் கொடுத்துள்ள ஆணையை, மதித்து செயற்படுவதற்கான நிலையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இல்லாதவிடத்து, இந்த நாடு மீண்டும் குட்டிச்சுவராக, பொருளாதாரத்தில் பின்னடைவைக் கண்டு வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாமல் போய்விடும் .
உங்களிடத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலம் இருக்கின்றது. கடந்த காலத்தில், ஆட்சியாளர்கள் தேவையான நேரத்தில் தங்களுக்கு தேவையான சட்டங்களை இயற்றிக்கொண்டார்கள். இவ்வாறு நீங்கள் இல்லாது, நாட்டு மக்கள் வழங்கியுள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, மக்களுக்கான சட்டங்களை ஏற்படுத்துவது தொடர்பில் கூடிய கவனத்தை செலுத்துங்கள்.
குறிப்பாக, எம்மைப் பொறுத்தவரையில், இந்திய நாடானது மிகவும் முக்கியத்துவமிக்கதாகும். அண்மைய, ஜனாதிபதி அவர்களின் விஜயத்தினை அடுத்தான கூட்டறிக்கையில், நாங்கள் ரோட் கெணக்டிவிட்டியினை காணவில்லை. கடந்த கால அரசாங்கங்கள், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பாலம் அமைப்பது தொடர்பிலான பேச்சுக்களை நடத்தி, சில உடன்பாடுகளையும் எட்டியிருந்தனர். ஆனால், அது கைவிடப்பட்டுவிட்டதா? அல்லது இந்த அரசாங்கத்திற்கு அதில் உடன்பாடு இல்லையா? என்ற விடயம் தொடர்பில், நாம் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.
இந்த நாடு பஞ்சத்தில் விழுந்தபோது, இந்தியா 4 பில்லியன்கள் டொலர் வழங்கி பெரும் உதவியினை செய்தது. அவ்வாறு இந்த உதவி கிடைக்காமல் போயிருந்தால், எமது நாடு இன்னும் அதலபாதாளத்துக்கு போயிருக்கும். இவ்வாறான நிலையில், இந்த இணைக்கும் பாலம், இந்தியாவில் உள்ள 1 பில்லியன் மக்களை இணைக்கும் ஒன்றாக மாறுகின்றது மட்டுல்லாமல், யாரெல்லாம் இந்தியாவுக்குச் சுற்றுலாக் கருதி வருகின்றார்களோ, அவர்கள் மூலமாக எமது நாட்டின் பொருளாதாரமும் சுற்றுலாத் துறையும் மேம்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
நாட்டின் பொருளாதாரமும் சுற்றுலாத் துறையும் மேம்படக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
உதாரணமாக, பஹ்ரைன் நாட்டில் சென்று பார்த்தால், சவுதி அரேபியாவினை இணைக்கும் பாலம் இருக்கின்றது. ஒன்று போதாது என்பதினால் இரண்டாக அதனை அதிகரித்திருக்கின்றது அரசு. இவ்வாறு பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பாலம் என்பனவற்றை குறிப்பிடலாம். எனவே, இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது, யுத்தத்தால் குறிப்பாக, பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் வாழுகின்ற மக்கள் குறிப்பாக, நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மன்னார் மக்கள் நன்மையடைவதுடன், சுற்றுலாத்துறையினால் இந்தப் பிரதேசங்கள், பொருளாதார ரீதியில் நன்மையடையக் கூடிய சூழல் உண்டு. எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோல், சஜித் பிரேமதாச அவர்கள் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது, ஆரம்பித்த வீட்டுத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அறைகுறையாக காணப்படுகின்றது. இந்த க்ளீன் ஸ்ரீலங்காவின் மூலம், அந்த வீடுகளை அமைப்பதுதான் முக்கியம். நாங்கள் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்குச் செல்கின்றபோது, மக்கள் அங்கு வந்து, இந்த வீடமைப்பினை நிறைவுசெய்து தருமாறு கேட்கின்றனர். எனவே, கோட்டாபய செய்தது போன்று இதனை நிறுத்தாமல், அதற்கான மதிப்பீட்டினை செய்து, அந்தப் பணத்தை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுங்கள்.
அதேபோன்று, 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், அவர்களது சொந்தப் பிரதேசத்தில் மீளக்குடியமர சென்றபோது, அந்தப் பிரதேசம் மக்கள் வாழ முடியாத பகுதியாக காணப்பட்டது. என்னுடன் யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கு வந்து பார்வையிட்டனர். எனவே, நாங்கள் சொந்த நிதியைக்கொண்டு ஒரு காணியை பெற்றுக்கொடுத்தோம். அந்தக் காணியின் அபிவிருத்திக்காக, கடந்த அரசாங்கம் 8 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்தது. ஆனால், தற்போதைய புதிய ஜனாதிபதியின் சுற்றுநிருபத்திற்கமைய, அந்த பணத்தை நிறுத்தியுள்ளார்கள். தயவுசெய்து, அந்த பணத்தை வழங்கி, அந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவி செய்யுமாறு வேண்டுகின்றேன்.
இதே போன்று, புத்தளம் தள வைத்தியசாலையை எடுத்துக்கொண்டால், அங்கு போதுமான தூய்மையின்மை காணப்படுகின்றது. அதனை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்கள் புத்தளத்திற்கு வந்தது முதல், அந்த வைத்தியசாலை பல்வேறு தேவைகளைக்கொண்டதாக மாறியுள்ளது. இந்த வைத்தியசாலையை, வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் அபிவிருத்தி செய்ய முயற்சிகளை செய்தவேளை, அந்த அரசாங்கம் மாறிவிட்டது. 35 வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து, அபிவிருத்திகளை செய்யவுள்ளதாக அறிகின்றோம். எனவே, புத்தளம் வைத்தியசாலையையும் இந்த திட்டத்துக்குள் உள்வாங்குமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
அதேபோல், வவுனியாவில் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கொட்டப்படுகின்ற குப்பைகளினால் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களும் அதுபோன்று, அயலில் உள்ள கிராமங்கள், குடியிருப்புக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்த ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தில், இதற்கான பாதுகாப்பு அரண்களை அமைத்து, மாணவர்களும் மக்களும் பாதிக்காத வகையில், வவுனியாவில் முதல் திட்டமாக இதனைச் செய்யுங்கள்.
அதேபோல், புத்தளம், முந்தல், கல்பிட்டி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஒரு பிரதி திட்டப் பணிப்பாளர் நிசான்த என்பவர், கடந்த அரசாங்கத்தில் நாங்கள் பெற்றுக்கொடுத்த பணத்தில் ஒரு சதத்தையேனும் செலவழிக்காமல் இருந்துள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பணத்தினை செலவு செய்துள்ளார். இது தொடர்பில், இவரிடம் கேட்டபோது, குறித்த பணம், முஸ்லிம்களும், தமிழ் மக்களும் வாழ்கின்ற கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இந்தப் பணிகளை நிறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
இந்தப் பணத்தினை மக்களுக்கு செலவு செய்திருந்தால், மக்கள் நன்மை அடைந்திருப்பார்கள். மிகவும் துவேசத்துடன் இப்படி செயற்படுவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்ற அதிகாரிகள் இவ்வாறு செயற்படுகின்றபோது, பாராளுமன்ற உறுப்பினர்களை க்ளீன் செய்வதில் காட்டுகின்ற கரிசனையை, இப்படிப்பட்ட அதிகாரிகள் மீதும் காட்டி, இவர்களை க்ளீன் செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அத்துடன், நேற்றைய தினம் கல்முனையிலும் மன்னாரிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அங்கு காணப்படும் மதுபானசாலைகளுக்கு எதிராகவே இவை இடம்பெற்றுள்ளன. எனவே, இது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.