உள்நாடு

கம்பளை மாணவி கடத்தல்; பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம், இருவருக்கு இடமாற்றம்

கண்டி, கம்பளை, தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பொலிஸ் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திற்கும், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான உள்ளக பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் உத்தரவின் பேரில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் தவுலகல பொலிஸ் பிரிவின் ஹபுகஹயட பகுதியில் இந்த கடத்தல் நடந்தபோது, அந்த இடத்தில் பயணித்ததாக கூறப்படும் கம்பளை பொலிஸில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் அது தொடர்பில் தவுலகல பொலிஸின் செயற்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளார்.

எனினும் அந்த அறிவிப்பு குறித்து தவுலகல பொலிஸார் உரிய முறையில் செயற்படவில்லை என குற்றச்சாட்டில் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *