பாடசாலை மாணவன் மின் தாக்கி மரணம்
ஹுரிகஸ்வெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட மகுலேவ சுதர்சனகம வில் இன்று (21) பிற்பகல் அயல் வீட்டில் உள்ள பலா மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய பாடசாலை மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அ / மகுலேவ தேசிய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி கற்று வரும் இந்துசர விஜேரத்ன என்ற சுதர்சனகம மகுலேவ பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையான இவர் இன்று (21) பிற்பகல் தனது பாட்டி மற்றும் தனது சகோதரருடன் பக்கத்து வீட்டில் உள்ள பாரிய பலா மரத்தின் கிளைகளை வெட்டச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வெட்டப்பட்ட பலாமரக் கிளை பிரதான வீதியில் உள்ள மின் கம்பியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து இவர் மரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார் . உடனடியாக வீட்டார் தம்புத்தேகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுரிகஸ்வெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )