நீரில் மூழ்கிய ஒலுவில் ஆலிமுட காடு நெற்காணிகளும் : விவசாயிகளின் அங்கலாய்ப்பும்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் அஸ்ரப் நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட அறுவடைக்கு (20 / 25 நாட்களில்) தயாராகவுள்ள நெற்காணி ஏக்கர்கள் தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஆலிமுட காடு பண்டு உடைப்பு எடுத்தமையினால் நீரில் மூழ்கி முழுமையாக சேதமடைந்ததுள்ளன.
காலாகாலமாக இடம்பெற்று வரும் இவ்வாறான அனர்த்தங்களுக்கும், பலாயிரம் கோடி நஷ்டத்திற்கும் பொறுப்புக் கூறுவது யார்.?
இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் உயர் மட்ட அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது இவ்வாறான பிரச்சினைகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக் கூடாது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில் “இது அனர்த்தம் அல்ல.! மாறாக குளங்களை பராமரிக்கும் அதிகாரிகள் உரிய முறையில் நீரின் அளவை பேணிப் பராமரித்து இருந்திருந்தால் இவ்வாறான அனர்த்த நிலைமைகளினை தவிர்ந்திருக்க முடியும், இவ்வாறு பிழையான பரிபாலனம் செய்யும் ஒரு சில அதிகாரிகளால் பல கோடி நஷ்டங்கள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கும் ஏற்படுகின்றன. அத்தோடு அரசி தட்டுப்பாடும் ஏற்படுகின்றது. இவர்கள் தண்டிக்கப்படுகின்றனரா..? இது தொடர்பான அதிகாரிகளுக்கு முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.”
மேலும், இவ் அனர்த்த நிலைமையினை பார்வையிட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் PTM. இர்பான், அக்கரைப்பற்று பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீவேந்தர டயஸ் மற்றும் இராணுவ மேஜர் கித்ஸ்ரீ ருவான், நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் சுகிதரன் வீதி அபிவிருத்தி பொறியலாளர் முனாஸ் என உயர் அதிகாரிகள் கள விஜயம் செய்ததோடு அதிலும் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அவர்கள் உரிய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இதற்கான தீர்வை மேற்கொள்வதற்காக தங்களுடைய பணிகளை மேற்கொண்டமைக்கு ஒலுவில் விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.
(இசட். முஹம்மட் இம்தாத் )