அமெரிக்க பிறப்புரிமை சட்டத்தில் மாற்றம், கடுமையான இறக்குமதி வரி; பதவியேற்பு உரையில் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க மண்ணில் பிறக்கும் அனைவருக்கும் அமெரிக்க பிறப்புரிமை வழங்கும் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் மிகவும் அபத்தமானது என ட்ரம்ப் விமர்சித்திருந்தார். குறித்த பிறப்புரிமை சட்டம் அமெரிக்க அரசியல் சாசன சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளதால், ஒரு அரச உத்தரவின் மூலம் அதனை நீக்குவது எளிதான விடயமல்ல என கூறப்படுகின்றது.
கடுமையான இறக்குமதி வரி
அத்துடன், போதைப் பொருள் கடத்தல் குழுக்களை “வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு” என்று டிரம்ப் வகைப்படுத்த போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போதைப் பொருள் கடத்தல் குழுக்கள், தீவிரவாத குழுக்களுக்கு இணையாக கருதப்படுவர்.
மேலும், 2016ஆம் ஆண்டு டிரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அமெரிக்க எல்லையில் சுவர் எழுப்புவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இந்த சுவரின் சில பாகங்கள் கட்டப்பட்ட போதிலும், பெருமளவில் கட்டப்படாமல் இருக்கின்றது. இந்த முறை சுவர் முழுமையாக கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரியை விதிக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
ட்ரம்ப்பின் கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில வரிகளை முன்னைய ஜனாதிபதி ஜோ பைடனும் பின்பற்றியிருந்தார்.
இந்த ஆட்சியில் அனைத்து இறக்குமதிகளுக்கும் 10% வரிகளையும், கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25% மற்றும் சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 60% வரியையும் விதிக்க உள்ளதாக ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.
இந்த தீர்மானம், நுகர்வுப் பொருட்களின் விலையை அதிகரித்து பணவீக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவான வரி விதிப்பது குறித்து பல நாடுகளும் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.