ரிஸ்வான் ஸாலி உதைபந்தாட்டத் தொடரில் பேருவளை கிரேட் ஸ்டார் சாம்பியன்.
பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கம் “தலைவர் ரிஸ்வான் ஸாலி வெற்றிக்கிண்ணத்திற்காக” நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி 18 ஆம் திகதி (18-01-2025) களுத்துறை வேனன் பெர்ணான்டோ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பேருவளை கிரேட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும், தர்கா நகர் ரெட் ஸ்டார் உதைப்பந்தாட்ட கழகமும் இறுதிப் போட்டியில் மோதியதோடு, பேருவளை கிரேட் ஸ்டார் விளையாட்டு கழகம் 6-1 என்ற கோல் வீதத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
பேருவளை உதைப்பந்தாட்ட சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 20 விளையாட்டு கழகங்கள் இச் சுற்றுப்போட்டியில் பங்கு பற்றியதுடன் இறுதிப் போட்டிக்கு மேற்படி இரு அணிகளும் தெரிவாகின.
போட்டி ஆரம்பமாகி 5வது நிமிடத்தில் கிரேட் ஸ்டார் விளையாட்டு கழக வீரர் தமது அணிக்கு கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார்.
மேலும், 18ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோல் ஐ கிரேட் ஸ்டார் அணி பெற்றுக் கொண்டது.
அதைத் தொடர்ந்து மேலுமொரு கோல் ஐ பெற்றுக் கொண்டதோடு, தர்கா நகர் ரெட் ஸ்டார் அணி வீரர் தமது அணிக்காக ஒரு கோல் ஐ பெற்றுக் கொடுத்தார்.
இடைவேளைக்கு முன்னர் இறு அணி வீரர்களும், தமது அணிக்கு மேலும் கோல்களை பெற்றுக் கொடுக்க விடா முயற்சியோடு ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைவேளையின் பின்னர் போட்டி மீண்டும் ஆரம்பமானது. பேருவளை கிரேட் ஸ்டார் அணி இடையிடையே மேலும் கோல்களை பெற்று 6-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
பேருவளை கிரேட் ஸ்டார் அணி கெப்டன் முஹம்மது ரிமாஷ் தமது அணியை சிறப்பாக வழிநடாத்தி 6 கோல்களை பெற்றுக் கொண்டு சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
தலைவர் வெற்றி கிண்ணத்திற்காக நடாத்தப்பட்ட சுற்று போட்டிக்கான முழுச் செலவையும் பேருவளை உதைப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரிஸ்வான் ஹாஜியார் பொறுப்பேற்றிருந்தார்.
பேருவளை மஹகொட ஐ.எல்.எம்.ஸம்ஸுதீன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தலைவர் கிண்ண அறிமுக நிகழ்வில் அவர் 10 லட்சம் ரூபாய் அன்பளிப்புச் செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
18 ஆம் திகதி மாலை நடைபெறும் பரிசளிப்பு விழாவுக்கு தலைவர் எம்.எஸ்.எம் ரிஸ்வான் ஹாஜியார் தலைமை வகித்தார்.
இலங்கை உதைப்பந்தாட்டச் சம்மேளனன தலைவர் எம்.ஜஸ்வர் உமர் பிரதம அதிதியாகவும், உப தலைவரும் களுத்துறை உதைப்பந்தாட்ட சங்க தலைவருமான டொக்டர் மனில் பெர்ணாந்து கெளரவ அதிதியாக கலந்து கொண்டனர்.
களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கே.டி சந்திரபால, களுத்துறை முன்னாள் நகரபிதா ஆமிர் நஸீர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் பங்கு பற்றினர்.
பேருவளை உதைப்பந்தாட்ட சங்க முன்னாள் தலைவரும், சுற்றுப் போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவருமான ஏ.ஆர்.எம் பதியூத்தீன், உப தலைவர் முஹம்மத் ஸனூபர், செயலாளர் எம்.எஸ்.எம் ஸினான், பொருளாளர் ஏ.ஜே.எம் அக்பர், அவிஸ்ஸாவெல்ல உதைப்பந்தாட்ட ஙம்மேளன தலைவர் உட்பட உறுப்பினர்கள், இதன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 20 கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரமுகர்கள், பெருமளவிலான ரசிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-19-at-17.34.50_c2f12ca4.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-19-at-17.34.50_5c4f5b81.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/WhatsApp-Image-2025-01-19-at-17.34.51_f3063f4e.jpg)
![](https://uthayam.lk/wp-content/uploads/2025/01/IMG-20250119-WA0388.jpg)
(பேருவளை பீ.எம்.முக்தார்)