கற்பிட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 2025 ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (17) கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் மிலங்க பிரசாத் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம் பைசல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், கயான் ஜானக மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கற்பிட்டி பிரதேச இணைப்பாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்தோடு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கற்பிட்டி விஜயா கடற்படைத் தளபதி, கற்பிட்டி மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கற்பிட்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரி, கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர், பாலக்குடா விவசாய ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி, கண்டக்குளி வன ஜீவி அலுவலக அதிகாரிகள், கடற்றொழில் அலுவலக அதிகாரிகள், கல்விப் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கற்பிட்டி பிரதேச சுகாதார மற்றும் சுற்றுச்சூழல், உல்லாச பயணத்துறை, கடற்றொழில் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை , மீன்பிடி முறை பற்றியும், மழை வெள்ளத்தின் தாக்கம் விவசாய உற்பத்தியின் பாதிப்புக்கள், காட்டாக்காளி மாடுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதற்காக பிரதேச சபையினால் மேற்க் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் போதைப் பொருள் பாவனை அதனை இல்லாது ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட வேண்டியதன் அவசியம் என பல்வேறு அபிவிருத்தி திட்ட செயற்பாடுகள் மற்றும் கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் அடிப்படை தேவைப்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)