சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை வில்பத்து தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை
அண்மையில் பெய்த கனமழையால் கலா ஓயா நிரம்பி வழிந்ததால், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம், கலா ஓயா வழியாகப் பாயும் சுமார் 6,000 கன அடி நீர் வில்பத்து தேசிய பூங்காவிற்குச் செல்லும் எளுவன்குளம்-கலா ஓயா பாலம் வழியாகப் பாய்ந்து, அந்தப் பகுதி முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
அதன்படி, வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயிலுக்குப் பொறுப்பான வனவிலங்கு பிரிவு, மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட முடியாது என தெரிவித்துள்ளது.
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)