வெற்றிகரமாக நடந்து முடிந்த பெந்தோட்டை சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி.
பேருவளை சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கம் பெந்தொட்டை சினமன் பீச் ஹோட்டலில் நடாத்திய (GEM SRI LANKA – 2025) சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
ஜனவரி 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியதுடன், அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் (கொள்வனவாளர்கள்) இதில் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.
இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும், இரண்டாம் நாள் நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் ஸஜித் பிரேமதாஸவும், மூன்றாம் நாள் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவும் பங்குபற்றினர்.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் ஒத்துவைப்புடன் கண்காட்சி இடம் பெற்றதுடன் சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க தலைவர் மர்ஜான் பளீல், ஜெம் சிறீலங்கா தலைவர் ஹில்மி காஸிம் உட்பட உறுப்பினர்களின் தியாகமிகு அர்ப்பணிப்பு காரணமாக எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்து முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நடை பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சிகளில் மிகவும் பிரமாண்டமான கண்காட்சியாக இதை குறிப்பிட முடியும். உலகின் பல நாடுகளிலிருந்தும், உள்நாட்டு வர்த்தகர்கள் அதிகளவில் பங்குபற்றினர். உல்லாச பயணபுரியாக திகழும் பெந்தொட்டை பகுதி இந்த மூன்று நாட்களும் மிகவும் கலகலப்பாக காணப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்த (G.K GEMS) அதிபதியும், உலகின் முன்னணி இரத்தினக்கல் வர்த்தகருமான சன்ரன் ராமசாமி (Chandran Ramasamy) மற்றும் (MAHAKAVEE GEMS) அதிபதியும், முன்னணி இரத்தினக்கல் வர்த்தகருமான சுரேஷ் நடராஜன் (Suresh Natarajan) ஆகியோரும் இக் கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர்.
சீனன்கோட்டை (RIYASH GEMS) அதிபதி ரியாஸ் ஸனூன் சகிதம் சமூகமளித்த இவர்கள் கண்காட்சியை பெரிதும் பாராட்டினர். கண்காட்சி கூடங்களை பார்வையிட்ட அவர்கள் சங்க உறுப்பினர்களையும் சந்தித்தனர்.
இந்திய வர்த்தகரான சன்ரன் ராமசாமி இது தொடர்பில் ஊடகங்களுக்கு கூறியதாவது, இலங்கையின் பெந்தொட்டையில் மூன்று நாட்கள் நடைபெற்ற (GEM SRI LANKA – 2025) கண்காட்சியில் கலந்து கொண்டேன். கண்காட்சியை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இக் கண்காட்சியில் சிறீலங்காவின் அரிய வகை இரத்தினக்கல் மற்றும் ஆபிரிக்கா உட்பட பை நாடுகளின் இரத்தினங்களையும் கண்டேன்.
இலங்கையினதும், சர்வதேசத்தினதும் அதிகளவான வியாபாரிகள் வந்திருந்தனர். இக் கண்காட்சியானது, சர்வதேச மற்றும் உள்நாட்டு வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. ஜெம் சிறீலங்கா – 2025 கண்காட்சியில் கலந்து கொள்ளக் கிடைத்தமையானது, மகிழ்ச்சிக்குரியது. இக் கண்காட்சிக்கு எம்மை அழைத்ததையிட்டு ஜெம் சிறீலங்கா ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். கண்காட்சியை நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்ததை பாராட்டுகிறேன் என்றார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)