புத்தளத்தில் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் பெரும் பங்காற்றியவர் முன்னாள் கல்விப் பணிப்பாளர் சியான்.
-கல்விப் பணிப்பாளர் சியான் மறைவுக்கு கலாநிதி இல்ஹாம் மரிக்கார் அனுதாபம்.
புத்தளத்தின் உதவிக் கல்வி பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் மிகவும் உயர் கல்வி நிலையினை தோற்றுவிப்பதில் மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் தியாகத்துடன் செயற்பட்டார் என்று சமூக செயற்பாட்டாளரும்,கலாநிதியுமான இல்ஹாம் மரைக்கார் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது:
இன்று (16) இவ்வுலகைவிட்டு பிரிந்த கல்விமான் எம்.எம்.சியான் ஆசிரியர் அவர்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது –
மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாக கொண்ட கல்விமான் எம்.எம்.சியான் அவர்கள் 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்வின் பின்னர் புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையொன்றில் அதிபராக பொறுப்பேற்று அப்பாடசாலையின் மேலாக்கத்திற்கு அரும் பணியாற்றிவர்.
இதனையடுத்து புத்தளம் வலயக் கல்விப் பணிமனையில் உதவி தமிழ் மொழி கல்விக்கான பணிப்பாளராக நியமனம் பெற்றார்.
அவரது நியமனத்தின் காரணமாக பல புதிய ஆற்றல்களை மாணவர்கள் மத்தியில் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை காணமுடிந்தது.
ஆசிரியர்களின் ஒழுக்க நெறியுடன் மட்டுமல்லாது அவர்களின் பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளை நெறிப்படுத்தும மிகவும் முக்கியமான பணியினையும் மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள் முன்னெடுத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த வேண்டும்.
இந்த நிலையில் குறுகிய காலத்தில் அவரது ஆயுள் முடிவு பெற்றமை கல்வியலாளர்களுக்கு பெரும் இழப்பாகும்.
இந்த நிலையில் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன்,அவரது இழப்பு ஏற்படுத்தியுள்ள துயரத்தில் இருந்து அவர்களது குடும்பத்திற்கு இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்தனை செய்வதாகவும் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தமது இரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
(கற்பிட்டி நிருபர் – சியாஜ், புத்தளம் நிருபர் – சனூன், Irshad Rahumath)