மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலி
தம்புத்தேகம நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக கலாதிவுல்வெவ பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் பி ரனோரவ கலாதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த ஜயகொடி ஆராச்சிலாகே மிலிந்த சம்பத் மற்றும் ஜயநந்த புஷ்பகுமாரகே கழிந்து மதுஷான் ரத்நாயக்க என்ற பதினாறு வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரண்டு மாணவர்களும் நொச்சி யாகம துனுபோதகம வித்யா பிரதீபா வித்தியாலயத்தில் தரம் 11 ல் கல்வி பயின்று வருகின்றனர்.
உயிரிழந்த இரு மாணவர்களும் சில தேவைகளுக்காக தமது வீட்டுக்கு அருகாமையில் இருந்து தொம்பலாகம முற்சந்திக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பி ரனோரவ குளத்திற்கு சற்று தொலைவில் உள்ள பி ரனோரவ வீதியில் உள்ள வளைவிடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ் கண்டியிலிருந்து நொச்சி யாகம நோக்கி பயணித்த போது மாணவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)