பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே மோதல் ; பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படலாம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பதற்ற நிலை காணப்படுவதாகப் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலும், அதன் காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக உபவேந்தரினால் மாணவர் சங்கங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமையுமே இப்பதற்ற நிலைக்குக் காரணமெனவும் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்படுமெனவும் உபவேந்தர் அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு முகாமைத்துவப்பீட மாணவர்கள் உலக பல்கலைக்கழக மாணவர் மையத்தில் நடத்திய பிரியாவிடை நிகழ்வின்போது நடைபெற்ற நடன நிகழ்வில் அங்கு வந்த பொறியியற் பீட மாணவர்களும் நடனமாடத் தொடங்கியுள்ளனர். இதன்போது முகாமைத்துவப் பீட மாணவிகளுடன் பொறியியற்பீட மாணவர்கள் சிலர் கைக்கோர்த்து நடனமாடியதன் காரணமாக முகாமைத்துவப் பீட மாணவர்கள் பொறியியற் பீட மாணவர்களை அவ்விடத்தினை விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கைகலப்பு ஏற்பட்டது. இவ்வாய்த்தர்க்கத்தினால் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு மற்றவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேராதனைப் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸ் விசாரணைகள் வரும் என்பதால் மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்பட்டதாக கூறியே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் கடந்த வருடம் மிருக வைத்திய பீட மாணவர்களது ஒன்று கூடலில் இவ்வாறான ஒரு நடன நிகழ்வின்போது பொறியியற் பீட மாணவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் மிருக வைத்திய பீட மாணவர்கள் தாக்கப்பட்டுமிருந்தனர். இவற்றின் காரணமாக பொறியியற் பீட மாணவர்களுக்கு எதிராக ஏனைய எட்டு பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஒன்றினைந்து தாக்குவதற்கு முனைந்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் ஏனைய எட்டு பீடங்களை சேர்ந்தவர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் தமது மாணவர் சங்க கூட்டங்களை நடாத்தி பொறியியற் பீட மாணவர்களைத் தாக்குவதற்கான தீர்மானங்களை எடுத்துள்ளனர். இதனை எதிர்ப்பதற்கு பொறியியற் பீட மாணவர்கள் சங்கம் தமது கூட்டத்தினை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவங்கள் ஒழுக்காற்றுக் குழு மூலம் உபவேந்தருக்கு அறிவிக்கப்பட்டதன் பின் உடனடியாக சகல பீட மாணவ சங்கங்களுக்கும் தடை விதித்துள்ளதோடு ஒன்று கூடுவதற்கும், கூட்டங்களை நடத்துவதற்கும், கூட்டங்களில் உரையாற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது, மாணவர்களிக்கிடையே மோதல் ஏற்படுமானால் உடனடியாக காலவரையறையின்றி பல்கலைக்கழகம் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (17) உபவேந்தர் காரியாலயத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அனைத்து மாணவர் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டத்திலேயே உபவேந்தர் இவ்வாறு அறிவித்துள்ளார். இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் பதற்ற நிலை காணப்படுகிறது.
மாணவர் சங்கங்களைத் தடை செய்தமை தொடர்பாக சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.