சவுதி அரேபியாவின் ஏற்பாட்டில்இலங்கையில் இரண்டாவது தடவையாகவும்அல் குர்ஆன் மனனப்போட்டி பரிசளிப்பு விழா
திங்களன்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்
‘இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் நடைபெறவிருக்கும் அல் குர்ஆன் மனனப் போட்டி பரிசளிப்பு விழாவில் புத்தசாசன மற்றும் சமய, கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சவுதி அரேபியாவின் இந்தியப் பிராந்திய இஸ்லாமிய விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் நாசிர் அல் அனஸி மற்றும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் விசேட விருந்தினராகக் கலந்து கொள்கின்றனர்’.
‘மறைந்த மன்னர் அப்துல் அஸீஸ் மற்றும் தற்போதைய மன்னரும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் பெயரில் பெருந்தொகைப் பணப்பரிசில்களுடன் தேசிய, சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டிகளை தொடர்ந்தும் நடாத்திவருவது சவுதி அரேபிய அரசின் வழக்கம்’
‘இலங்கை வரலாற்றில் சவுதி ஏற்பாட்டில் அந்நாட்டின் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சின் ஊடாக தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் 2023 இல் முதன்முறையாக அல் குர்ஆன் மனனப்போட்டி நடத்தப்பட்டது’
சவுதி அரேபியா அன்று தொட்டு இன்று வரை அல் குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவுக்கும் மிக முக்கியத்துவம் அளித்து வரும் நாடாகும். இதனை அனைவரும் அறிவர். அந்த வகையில் சவுதி அரேபியாவுக்குள்ளேயும் உலக நாடுகளிலும் அல் குர்ஆன் மனனப்போட்டிகளை தொடர்ந்தும் நடாத்தி பல மில்லியன் ரியால்களை அதற்கான பரிசில்களாக வழங்கி வருகிறது.
உலகில் ஹாபிழ்கள் (அல் குர்ஆனை மனனம் செய்தவர்கள்) எங்கிருந்தாலும் அவர்களை அதிஉச்ச அளவில் கௌரவிப்பது சவுதி அரேபியாவின் மன்னர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பாரம்பரியங்களில் ஒன்றாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு தான் காத்தான்குடியைச் சேர்ந்த கண்பார்வையை இழந்த முக்பில் ஸினான் என்ற 12 வயது ஹாபிழை தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தூதரகத்திற்கே அழைத்து கண்ணியப்படுத்தினார்.
இவ்வாறான பின்புலத்தில் முன்னாள் மன்னர் மறைந்த அப்துல் அஸீஸ் மற்றும் தற்போதைய மன்னரும் இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் பெயரில் பெருந்தொகைப் பணப் பரிசில்களுடன் தேசிய, சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டிகளை சவுதி அரேபியா தொடர்ந்தும் நடத்தி வருகிறது.
அண்மையில் கூட புனித மக்காவில் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டியொன்று நடத்தப்பட்டது. அதில் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஹாபிழ்கள், ஹாபிழாக்கள் கலந்து கொண்டு இலட்சக்கணக்கான ரியாழ்கள் பெறுமதியான பரிசில்களை வெற்றி பெற்றனர். இத்தகைய அல் குர்ஆன் மனனப் போட்டிகள் உலகின் பல நாடுகளிலும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார மற்றும் தஃவா வழிகாட்டல் அமைச்சர் கலாநிதி அஷ்ஷைக் அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸின் நேரடி கண்காணிப்பிலும் தொடர்ந்தும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது உலகளாவிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும் அந்தந்த நாடுகளின் தலைவர்களாலும் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. இதே போன்றதொரு அல் குர்ஆன் மனனப் போட்டியொன்று பெருந்தொகையான பரிசில்களுடன் எதிர்வரும் ரமழானுக்கு முன்னரும் சவுதி அரேபியாவில் நடாத்தப்பட உள்ளது.
அந்த வகையில் இலங்கை வரலாற்றில் சவுதி அரேபிய ஏற்பாட்டிலான முதலாவது அல் குர்ஆன் மனனப்போட்டி கடந்த 2023 இல் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையிலும், சவுதி அரேபிய இந்தியப் பிராந்திய இஸ்லாமிய விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் நாசிர் அல் அனஸியின் பிரசன்னத்தோடு இஸ்லாமிய விவகார நேரடி கண்காணிப்பிலும் நடத்தப்பட்டது. அப்போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு சவுதி அரேபிய இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சினது உயர் அதிகாரிகள் பலரும் இலங்கைக்கு வருகை தந்து கலந்து சிறப்பித்ததோடு இலங்கையில் பாரிய பாராட்டைப் பெற்றது.
கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் நடாத்தப்பட்ட இப்பரிசளிப்பு விழாவில் இரண்டரை இலட்சம் ரியால்கள் (அப்போதைய இலங்கை நாணயப்படி இரண்டு கோடி 25 இலட்சம் ரூபாய்) பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அந்த வகையில் சவுதி அரேபியா இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அல் குர்ஆன் மனனப் போட்டியை ஏற்பாடு செய்து நடத்துகிறது. அதற்கான ஏற்பாடுகள் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் பங்குபற்றுவதற்கான தெரிவும் அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் சவுதி அரேபிய தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பூரண ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நாட்டின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள், ஹிப்ழ் மத்ரஸாக்கள் ஆகியவற்றில் ஹாபிழ்களாக வெளியாகியுள்ள மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்குகொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. நான்கு பிராந்தியங்களாக நடாத்தப்பட்ட இப்போட்டிகளில் 1505 ஹாபிழ்கள் பங்குபற்றினர்.
அந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ், உதவிப் பணிப்பாளர் நிலூபர், மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களினதும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட, பிரதேச மட்டத்தில் உள்ள கலாசார உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புகளுடனும் பல கட்டங்களாக இப்போட்டிக்கான தெரிவுகள் இடம்பெற்றது. பல கட்டங்களாக தெரிவு நடாத்தப்பட்டு இறுதி போட்டிக்கு 24 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆண் ஹாபிழ்களும் 12 பெண் ஹாபிழ்களும் அடங்கியுள்ளனர். அவர்களுக்கு பல இலட்ச ரூபாய் பணப்பரிசில்களாக வழங்கி வைக்கப்பட உள்ளன. அத்தோடு சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை தூதரகம் மேற்கொண்டுள்ளது.
இப்போட்டியும் விழாவும் சிறப்பாக நடைபெற சவுதி அரேபிய தூதர் மற்றும் தூதரக ஊழியர்கள், தாஇகள் பலரின் பங்களிப்பும், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது. இப்போட்டியும் விழாவும் சிறப்பாக நடைபெற முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் , உதவிப் பணிப்பாளர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர் அஷ்ஷைக் முப்தி, அஷ்ஷைக் ஹாரிஸ் மதனி ஆகியோரை தூதுவர் அவர்கள் பல தடவைகள் சந்தித்து இது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இப்பரிசளிப்பு விழாவில் புத்தசாசன மற்றும் மத விவகார, கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சவுதி அரேபியாவின் இந்தியப் பிராந்தியத்தின் இஸ்லாமிய விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் நாசிர் அல் அனஸி மற்றும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் விசேட விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு இந்நாட்டு அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாறாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள், முஸ்லிம் சமய, கலாசார திணைக்கள பணிப்பாளர், நிறுவன தலைவர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் இவ்விழாவில் பங்குபற்ற உள்ளனர்.
அதேநேரம், 2023ல் சவுதி அரேபியா இஸ்லாமிய விவகார மற்றும் வழிகாட்டல் அமைச்சினூடாக இலங்கையில் நடாத்தப்பட்ட தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டி இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு இலங்கை அரசாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அவ்விழாவின் சிறப்பு விருந்தினராக முன்னாள் சபாநாயகர், முன்னாள் மத விவகார அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நட்புறவு நிலவிவருகிறது. குறிப்பாக கடந்த 50 வருட காலப்பகுதியில் சவுதி அரேபியா இலங்கையில் பல பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துள்ளது. பாதைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், பல்கலைக்கழகங்களுக்கு கட்டிடங்கள் அமைத்துக் கொடுத்தல், விஷேட வைத்திய கட்டிடங்கள், கட்டமைப்புகள் அமைத்துக் கொடுத்தல், இலவச வைத்திய முகாம்கள் நடாத்துதல், வைத்தியசாலைகளுக்கு இலவச அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைத்தல் போன்ற இன்னும் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளதோடு, பல இலட்சம் இலங்கையருக்கு சவுதி அரேபியாவில் தொழில் வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது. இதனால் இலங்கையின் தொழில் பிரச்சினைகளை சவுதி அரசு பெரிதும் தீர்த்து வைத்தத
அத்தோடு சவுதி அரேபிய மக்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பான சுற்றுலா நாடு இலங்கை எனக் கருதி இந்நாட்டுக்கு அதிகளவில் உல்லாசப் பயணம் மேற்கொள்கின்றனர். இவை இந்நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து அந்நிய செலாவணி இருப்பு பலமடைய வழிவகுத்துள்ளது எனலாம்.
அதேநேரம் சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தி பலப்படுத்துவதில் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அயராது உழைத்து வருகிறார். அவரது பணிகள் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவில் அழியாத்தடம் பதிக்கும் என உறுதிபடக்கூறலாம். அவரது முயற்சி மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரண்டாவது தடவையாகவும் அல் குர்ஆன் மனனப் போட்டியை இந்நாட்டில் நடாத்த சவுதி அரசு வாய்ப்பளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கிவரும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார வழிகாட்டல் அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக், மற்றும் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, சவுதி அரேபியாவின் இந்தியப் பிராந்தியத்தின் இஸ்லாமிய விவகாரப் பொறுப்பாளர் அஷ்ஷைக் பத்ர் நாசிர் அல் அனஸி, ஆகியோருக்கு அல் ஹிக்மா நிறுவனம் சார்பாகவும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் அனைவருக்கும், சவுதி அரேபியாவுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் அல்லாஹ்வின் அருளும் பாதுகாப்பும் கிடைக்கவும், முஸ்லிம்கள் உட்பட முழு உலகிற்கும் சுபீட்சம் கிடைக்கப்பெற்றிடவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தின்றேன்.
(அஷ்ஷைக் எம்.எச்.ஷைஹுத்தீன் மதனி)
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு.