நிட்டம்புவ தங்க நகைக்கடையில் 4 மில்லியனுக்கும் அதிகமாக கையாடிய முகாமையாளர் கைது!
நிட்டம்புவ New Swiss Gold House எனும் பிரபல நகைக்கடையின் முகாமையாளர், 46 இலட்சம் ரூபா பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நகைக்கடையில் 20 வருடங்களுக்கு முன்னர் விற்பனைப் பணியாளராக இணைந்து நிறுவனத்தின் முகாமையாளராக உயர்ந்த இவர் தவணை முறையில் நகை கொள்வனவு செய்தவர்களிடம் இருந்து பெற்ற கொடுப்பனவுகளை கையாடியிருப்பதாகவும் நிறுவனத்தின் visiting card ஐப் பயன்படுத்தி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை ஏமாற்றி தவறான முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தவிர பில் எழுதும் நடவடிக்கைகளிலும் பல மோசடிகளில் இவர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த முகாமையாளர் கம்பஹா விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீண்ட நாட்களாக மேற்கொண்ட தேடுதல் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை (8) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் வரையான காலப்பகுதியில் இவர் சிறிது சிறிதாக 46 இலட்சம் ரூபாவரை கையாடியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த தங்க நகைக் கடையில் கடமையாற்றிய எம்.ஜே.எம். பஸீம் எனும் விற்பனைப் பணியாளரை 2024.06.14 ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளதாகவும், தமது நிறுவனத்துக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் இவருடன் செய்து கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களுக்கு தாம் பொறுப்பல்ல எனவும் New Swiss Gold House முன்னதாக வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.