ஐஸ் போதைப் பொருளுடன் தம்பதியர் கைது
தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்திற்கு இணைவாக அனுராதபுரம் தலைமையக பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 30 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினரை கைது செய்துள்ளனர்.
தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள டுபாய் சுத்தா என்ற நபரே இந்த போதைப் பொருள் கடத்தலை முன்னெடுத்து வருவதாகவும் கைது செய்யப்பட்ட தம்பதியினர் எப்பாவல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களிடமிருந்து கண்டு பிடிக்கப்பட்ட ஐஸ் போதைப் பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களான தம்பதியினரும் முச்சக்கர வண்டியும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)