கல்முனை சாஹிராவில் பழைய மாணவர்களின் முயற்சியினால் மலசலகூடங்கள் புனர் நிர்மாணம் செய்து கையளிப்பு
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களான எம்.எம்.எம். அம்ஸத், ஏ.எச். பௌசுல் அமீன், ஏ.சீ.ஏ. மஸாஹிர், ஏ.ஆர்.எம். றீசா ஆகியோரின் முயற்சியினால் நவீன வசதிகளுடன் கூடிய 40 மலசலகூடங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டும் மற்றும் 04 மலசலகூடங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டும் மொத்தமாக 44 மலசலகூடங்களைக் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) பாடசாலையில் இடம் பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம். ஐ. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இவ்வேலைத்திட்டத்தை துரித கதியில் மேற்கொண்டு அதனை திறம்பட முடித்து தந்த மேற்குறிப்பிடப்பட்ட பழைய மாணவர்கள் உத்தியோகபூர்வமாக அதிபர் உட்பட ஆசிரியர் மற்றும் மாணவ குழாத்தினரின் பாவனைக்கு உதவும் வகையில் கையளித்தனர்.
கல்முனை சாஹிரா பாடசாலையில் கல்வி கற்ற இம்மாணவர்களின் முயற்சியினால் கொழும்பைச் சேர்ந்த ஒரு தனவந்தரினால் இப்பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் அமைக்கப்பட்டுள்ள மலசலகூடங்களுக்காக இப்பழைய மாணவர்களுக்கு அதிபர் குழாத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கி, பாராட்டிக் கௌரவித்தனர்.
இந்நிகழ்வில், பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் டாக்டர் சனூஸ் காரியப்பர் மற்றும் பாடசாலையின் முகாமைத்துவக் குழு மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)