புத்தளம் ,மறைந்த மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் மறக்க முடியாத ஆளுமை
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அனுதாபம்
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலானநல்லிணக்கத்திற்கு அதிக பங்களிப்புச் செய்த மறக்க முடியாத ஆளுமையென அவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புத்தளம் காஸிமிய்யா அரபிக் கல்லூரியின் முன்னாள் அதிபரும்,அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா முன்னாள் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும்,புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா முன்னாள் தலைவரும் , நாடறிந்த மூத்த இஸ்லாமிய சன்மார்க்க அறிஞர்களில் ஒருவருமான ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் இவ்வுலகை விட்டுப் பிரிந்த செய்தியறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தேன் .
நாட்டில் ஏராளமான உலமாக்களை உருவாக்கிய புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சங்கைக்குரிய மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் அவர்களின் அருமைப் புதல்வர் என்ற வகையில், அன்னார் விட்டுச் சென்ற மகத்தான பணியை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொட்டுத் தொடர்ந்த மறைந்த அப்துல்லாஹ் மஹ்மூத் ஹஸரத்,முக்கியமான ஏனைய விடயங்களைப் போலவே, முஸ்லிம்களின் சமூக, சமயப் பின்னணியுடனான கல்வி மேம்பாட்டிலும் அதிக அக்கறை செலுத்திவந்திருக்கின்றார்.
அவரது மறைவு புத்தளம் மாவட்டத்து மக்களுக்கு மட்டுமல்லாது, முழு நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகும்.
சமய ரீதியாகவும், சமூக ரீதியாகவும்,பிரதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் அவ்வப்போது தலை தூக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் அணுகி, அனுபவம் வாய்ந்த ஏனைய உலமாக்களையும்,அவசியம் ஏற்படும் சந்தர்ப்பங்களில், அரசியலில் ஈடுபட்டுவரும் எங்களையும் தொடர்பு கொண்டு,உயரிய இஸ்லாத்தின் வழிநின்று அல் குர்ஆன்,அல் ஹதீஸ் முதலான மூலாதாரங்களை மையப்படுத்தி மஷூராவின் அடிப்படையில் அவற்றுக்கு உகந்த தீர்வுகளைக் காண்பதில் அவர் பெருமளவு பங்களிப்புச் செய்திருக்கின்றார் ; இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் நிலவுவதற்கு அவர் அயராது பாடுபட்டிருக்கின்றார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவன பாக்கியத்தை அருள்வானாக.அவரது மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும்,புத்தளம் மக்களுக்கும் தனிப்பட்ட முறையிலும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.