இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு திருச்சி
தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம் நடாத்தும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு மே 9,10,11ந் திகதிகளில் திருச்சியில் நடைபெறவுள்ளது. இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தினால் முன்னெடுக்கப்படுவதாக கழகத் தலைவர் முனைவர், பேராசிரியர் சேமுமு முகம்மதலி, பொதுச் செயலாளர் முனைவர், பேராசிரியர் மு. இ. அகமது மரைக்கார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இலங்கையிலிருந்தும் இலக்கியவாதிகளின் வருகையை இஸ்லாமிய இலக்கியக் கழகம் பெருமளவில் எதிர்பார்க்கின்றது. இதன் காரணமாக மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைப் பேராளர்களுக்கு பதிவுக் கட்டணம் அறவிடுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக் கட்டுரைகள், மாநாட்டு மலருக்கான ஆக்கங்கள் என்பவற்றினை மாநாட்டுக் குழு எதிர்பார்க்கின்றது. ஆக்கங்களை நேரடியாக ஜனவரி 31ந் திகதிக்கு முன் மாநாட்டுக் குழுவினருக்கு மின்னஞ்சல் மூலம் நேரடியாக அனுப்புதல் வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய தமிழிலக்கியவாதிகளின் விபரக் கொத்தாக “யார் எவர்?” எனும் நூல் வெளியிடவும் மாநாட்டுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர். இதற்கான விபரங்களினை உரிய படிவத்தினைப் பூர்த்தி செய்து இந்திய ரூபா 300 செலுத்தியதற்கான ஆதாரத்துடன் விழாக்குழுவினர் எழுத்தாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இந்திய ரூபா 300 செலுத்துவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கும் முகமாக தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழக இலங்கை இணைப்பாளர்களில் ஒருவரான பொறியியலாளர் நியாஸ் ஏ. ஸமத் (தொலைபேசி எண் 0773541588) மூலமாக “யார் எவர்?” நூலுக்கான தகவல்களையும் அதற்குரிய பணமாக ரூபா 1,000 வினையும் (இந்திய ரூபா 300 வுக்கான மதிப்பு) செலுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமிய இலக்கியக் கழக இணைப்பாளராக டாக்டர் தாஸிம் அஹமத் அவர்களும் இயங்குகின்றார். உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாடு சம்பந்தமான மேலதிக தகவல்களையும் விண்ணப்பப் படிவங்களையும் இணைப்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இஸ்லாமிய இலக்கியக் கழகம், மாநாடு சிறப்புடன் நிகழ இலங்கை இலக்கியப் பேராளர்களின் பங்குபற்றுதலை மகிழ்வோடு எதிர்பார்ப்பதோடு ஆய்வுக் கட்டுரைகள், மாநாட்டு மலருக்கான ஆக்கங்கள், “யார் எவர்?” கோவைக்கான சுயவிபரங்கள் என்பவற்றினை ஜனவரி 31ம் திகதிக்குள் மாநாட்டுக்குழு எதிர்பார்க்கின்றது.