வாகன வருமான வரி கட்டணங்களில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை
பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் (08) பாராளுமன்றில் உரையாற்றும்போது கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றங்களினால் வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், களியாட்ட இடங்கள், மைதானங்கள், மயானங்கள், நூலகங்கள், திண்மக் கழிவகற்றல் போன்ற பல்வேறுபட்ட சேவைகளை மக்களுக்காக வழங்கி வருகின்றது.
அதற்கு மேலதிகமாக அண்மையில் வெளியிடப்பட்ட சுற்று நிரூபம் ஒன்றில் உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான சம்பள கொடுப்பனவில் 40 வீதத்தினை சபையின் நிதியிலிருந்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.
இவ்வாறான நிலையில் முத்திரை வரி, நீதிமன்ற தண்டப்பணங்கள், சொத்துக்களுக்கான வரிகள் போன்றவற்றினைக் கொண்டே உள்ளூராட்சி மன்றங்கள் வருமானங்களை மீட்டிக்கொள்கின்றது.
அதேபோன்று கடந்த காலங்களில் வீதிகளில் பயன்பாட்டில் இருந்த மாட்டு வண்டிக்கான வரி, துவிச்சக்கர வண்டிக்கான வரிகள் போன்றவை அறவீடு செய்யப்பட்டு வந்திருந்தாலும் தற்காலத்தில் அவற்றின் பாவனை குறைவடைந்துள்ளமையால் அவ்வரி அறவீடு நடைமுறையிலில்லை.
ஆகையால் பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வருகின்ற வாகன வருமான வரி கட்டணங்களை பங்கீட்டு வரி பட்டியலில் இணைத்து அதில் ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கினால் அதனுடைய சேவைகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டு செல்ல முடியுமென குறிப்பிட்டார்.
மேலும் கடந்த 13 வருடங்கள் உள்ளூராட்சி மன்றமொன்றின் தலைவராக செயற்பட்டு வந்த அனுபவத்தில், உள்ளூராட்சி நிறுவனங்களை நிர்வகிக்கும் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள் பல நிர்வாக அசெளகரியங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வேலைத்தொழிலாளிகள், சுகாதார தொழிலாளிகள் போன்ற ஆளனி தட்டுப்பாடுகளை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கவனத்திலெடுக்குமாறும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
(எம். எப். றிபாஸ்)