பெந்தோட்டை சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சிக்கு சஜித் பிரேமதாச வருகை
பெந்தொட்டை சினமன் பீச் ஹோட்டலில் நடைபெறும் (GEM SRI LANKA) சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை எதிர்க் கட்சித் தலைவர் ஸஜித் பிரேமதாஸ பார்வையிட்டார்.
8ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சியின் இரண்டாவது தினமான 9ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் வருகை தந்தார்.
சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க ஏற்பாட்டில் நடைபெறும் இக் கண்காட்சி 10ஆம் திகதியுடன் நிறைவு பெற்றது.
இரண்டாவது தடவையாகவும் நடைபெறும் இக் கண்காட்சியில் அதிகளவான வெளிநாட்டு வர்த்தகர்கள் சமூகமளித்திருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எதிர்க் கட்சித் தலைவருடன் பாராலுமன்ற உறுப்பினர்களான வேலுச்சாமி ராதாகிருஷ்ணன், ஜகத் விதான, பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜமீல், ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உளுப்பினர்களான டாக்டர். ரூமி ஹாஷிம், இபாம் ஹனபி, மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எச்.எம் அம்ஜாத், பேருவளை நகரசபை முன்னாள் உப தலைவர் ஹஸன் பாஸி உட்பட பலரும் சமூகமளித்திருந்தனர்.
சங்கத் தலைவர் மர்ஜான் பளீல், ஜெம் சிறீலங்கா தலைவர் ஹில்மி காஸிம், செயலாளர் அஷ்கர் முபாரக், பொருளாளர் மிஷ்கர் முனவ்வர், உப தலைவர் ரிஸ்வான் நயீம் உட்பட உறுப்பினர்கள் வரவேற்றதோடு, எதிர்க் கட்சித் தலைவர் கண்காட்சி கூடங்களுக்கும் சென்றார். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தகர்களுடனும், சங்க உறுப்பினர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர் ஸஜித் பிரேமதாஸ, “மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழில் என்பது நம் நாட்டில் விரிவாக்கல் செய்யக் கூடியதொரு தொழில் துறையாகும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், வரிச் சலுகைகளை வழங்கி, VAT மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளை நீக்கி, மாணிக்கக் கல் மற்றும் ஆபரண பொதிக்கு 200 டொலர் என்ற வகையில் Package வழங்குவதன் மூலம் இதை விரிவுபடுத்தலாம்
மேலும் இந்தத் தொழிலின் நிகர இலாபத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது. எமது நாட்டில் இந்தத் துறையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக இத்தொழிற் துறையை முன்னேற்றுவதற்குச் சாதகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, திறமையான கைவினைஞர்களை உருவாக்கி, ஏற்றுமதித் தொழிலாக இதனை மேலும் முன்னேற்றுவதற்கு அதிகபட்ச சலுகைகளை வழங்க வேண்டும்.
எனவே, மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழிலுக்கு நேர்மறையான முற்போக்கான குறுகிய கால வேலைத்திட்டமொன்றை வகுத்து அதனைச் செயல்படுத்தி, இத்தொழிலை மேலே கொண்டு வர முடியும். ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தை விஞ்சும் வகையில் எமது நாட்டின் மாணிக்கக் கல் மற்றும் ஆபரணத் தொழிலை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தமதுரையில் தெரிவித்தார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)