கற்பிட்டி பிரதேச செயலகத்தில் குடும்ப வன்முறை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகை
பாலாவியில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் குடும்ப வன்முறை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகை அமைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (09) கற்பிட்டி பிரதேச செயலகத்தில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜூவைரியா முகைதீன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் கடந்த 18 வருடங்களாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் நோக்கோடு பொலிஸ் முறைப்பாடு செய்தல், வீட்டு வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்தல், உளவளத் துணை ஆலோசணைகள் வழங்குதல், காதி நீதிமன்றத்தின் வழக்கு தாக்கல் செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்குதல், தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பு இல்லத்தில் வைத்து பராமரித்தல் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளுதல்
போன்ற பல் வேறு வகையான சேவைகளை செய்து வருகின்றது.
எனினும் அரச கட்டமைப்பு ஊடாக பல்வேறு சேவைகளை பெறக்கூடிய வாய்ப்புக்கள் மக்களுக்கு இருந்தும் இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பதனாலும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ள முடியாமலும் குடும்ப வன்முறையால் தொடர்ந்தும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. அத்துடன் குடும்ப வன்முறை ஒன்று நடைபெற்றால் ஒரு முறைமையின் ஊடாக சட்டரீதியாக எவ்வாறு முறைப்பாடு செய்யப்பட வேண்டும் என்ற முறைமை ஊடாக செல்லும்போது உடனடியாக பாதிக்கப்பட்ட நபர் உரிய நீதியை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது.
என்பதன் அடிப்படையில் இவ்வாறான விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் இவ் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டு வருவதாக இந்நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஆர். றிகாஸ் தெரிவித்தார்
இந் நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ். புத்தளம் எம் யூ எம் சனூன் )