உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார

“சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்போம்.”

– இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் உட்பட பல ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் லசந்த விக்கிரதுங்கவின் மரணம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீதி அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது,

“லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பில் நீதி, நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் கூறினார்.

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை விவகாரத்துக்கு நீதியை நிலைநாட்டுவோம். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அரசு என்ற வகையில் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். கடந்த காலங்களில் வழக்குகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு காரணிகளால் தாமதப்படுத்தப்பட்டுள்ள வழக்குகள் முறையாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம்.”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *