இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்திற்கு விடைகொடுக்கப்போகும் முஹம்மது சலாஹ்
நடப்பு உதைபந்து உலகின் நட்சத்திர வீரர்களுள் ஒருவரான எகிப்து நாட்டை சேர்ந்த முஹம்மது சலாஹ் லிவர்பூல் கழகத்திலிருந்து இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் முகம்மது சலாஹ்வின் லிவர்பூல் கழகத்துடனான தற்போதைய ஒப்பந்தம் பிரீமியர் லீக் சீசனின் முடிவுடன் முடிவுக்கு வருகின்றது.
எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான முஹம்மது சலாஹ் ஹமீட் மெஹ்ரோஸ் காலி கடந்த 2010ஆம் ஆண்டு எகிப்தின் உள்ளுர் கழகத்தில் தனது உதைப்பந்தாட்டத்தினை ஆரம்பித்திருந்தார். அதிலிருந்து இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான செல்சி கழகத்திற்கு 11 மில்லியன் யூரோவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் இத்தாலியின் ரோமா கழகத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட சலாஹ் 36.9 மில்லியன் யூரோவிற்கு இங்கிலாந்தின் லிவர்பூல் கழகத்துடன் முதல் முறையாக ஒப்பந்தமானார்.
பின்னர் அதிலிருந்து இன்று வரை லிவர்பூல் கழகத்தின் வெற்றிக்காக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார் சலாஹ். மேலும் அறிமுகம் பெற்ற முதல் இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் 36 போட்டிகளில் 32 கோல்களை உட்செலுத்தி தங்கக் காலனி விருதை தனதாக்கியிருந்தார் முஹம்மது சலாஹ்.
மேலும் சலாஹ்வின் லிவர்பூல் கழகத்துடனான சாதனைகளை பார்க்கையில் ஒரு பருவத்தில் அதிக கோல்களை உட்செலுத்திய வீரராக கடந்த 2017 இல் பெறப்பட்ட 44 கோல்களே இன்றுவரை முன்னிலை வகிக்கிறது. மேலும் வேகமாக லிவர்பூல் கழகத்துக்காக 50 மற்றும் 100 கோல்களை செலுத்திய வீரர்கள் வரிசையிலும் சலாஹ் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லிவர்பூல் கழகத்துடன் தனது கடைசி சீசனில் விளையாடுவதாக சலாஹ் உறுதிப்படுத்தியுள்ளார். பல மாதங்களாக சலாஹ் உடன் ஒரு புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இருப்பினும், அவரும் தனது கழகமும் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு இன்னும் நீண்ட தூரத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்இ லிவர்பூலுடன் பிரீமியர் லீக்கை வெல்வதே பட்டியலில் இருந்த முதல் விடயம். கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக எனது நேர்காணல்களில் நான் எப்போதும் சம்பியன்ஸ் லீக்கை வெல்ல விரும்புகிறேன் என்று கூறுவேன். ஆனால் லிவர்பூலுடன் பிரீமியர் லீக்கை வெல்ல விரும்புகிறேன் என்று நான் கூறுவது இதுவே முதல் முறை என்றார். சலாஹ்வின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும்இ லிவர்பூல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இதுவரையில் லிவர்பூர் கழகத்துக்காக விளையாடியுள்ள முஹம்மது சலாஹ் 375 போட்டிகளில் 231 கோல்களை உட்செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)