GEM SRI LANKA 2025 – BENTOTA மாபெரும் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தொடங்கி வைத்தார்
பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பூரண ஏற்பாட்டிலும், மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் பூரண அனுசரணையுடனும் “GEM SRI LANKA 2025 – BENTOTA” சர்வதேச மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண கண்காட்சி 08ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்ஹெத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தலைவர் உட்பட உயர் அதிகாரிகள், ஏற்றுமதி அபிவிருத்தி சபை உயர் அதிகாரிகள், சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அல்-ஹாஜ் மர்ஜான் பளீல், GEM SRI LANKA தலைவர் ஹில்மி ஹாஸிம், உப தலைவர் ரிஸ்வான் நயீம், செயலாளர் அஷ்கர் முபாரக், பொருளாளர் மிஷ்கர் முனவ்வர் உட்பட சங்க உறுப்பினர்கள்ஃ பேருவளை நகரசபை முன்னாள் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான அரூஸ் அஸாத், ஜாமியா நளீமிய்யா கலாபீட தலைவர் அல்-ஹாஜ் யாகூத் நளீம், அதன் முதல்வர் அஷ்ஷெய்ஹ். ஏ.ஸி அகார் முஹம்மத் (நளீமி), சீனன்கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளர் அல்-ஹாஜ் எம்.என்.எம் ஷிஹாப் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த சர்வதேச கண்காட்சியானது எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஆகிய தினங்களில் CINNAMON BENTOTA BEACH HOTELS வளாகத்தில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
09ஆம் திகதி ஆரம்ப நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் ஸஜித் பிரேமதாஸ கலந்து கொள்ளுவார்.
நூற்றுக்கு மேற்பட்ட இரத்தினக்கல் கண்காட்சிக் கூடகங்களை உள்ளடக்கிய இக்கண்காட்சியில் இலங்கையின் முன்னணி மாணிக்க கல் பிரபல வியாபாரிகள், உள்நாட்டு, வெளிநாட்டு மாணிக்க கல் பிரபல ஏற்றுமதியாளர்கள் உட்பட பல துறை சார்ந்த பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை மாணிக்க கல் வர்த்தகத்தை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக 02வது தடவையாகவும் இக்கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01வது கண்காட்சி நடைபெற்றதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு முன்னணி இரத்தினக்கல் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
2024 கண்காட்சி மிக வெற்றிகரமாக நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2025ஆம் ஆண்டு கண்காட்சி, அதைவிட சிறப்பாக நடைபெற்று நிறைவேறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
(பீ.எம் முக்தார்)